

உங்கள் நடிப்பு என்றுமே என்னை வாயடைக்க வைத்துள்ளது என்று இர்ஃபான் கான் மறைவு குறித்து கமல் தெரிவித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான். அதற்குப் பிறகும் மீண்டும் சில படங்களில் நடித்தார். இதனிடையே நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 29) காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இர்ஃபான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
"சீக்கிரமாக விட்டுச் சென்றுவிட்டீர்கள் இர்ஃபான் ஜி. உங்கள் நடிப்பு என்றுமே என்னை வாயடைக்க வைத்துள்ளது. எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் இன்னும் நீண்ட காலம் இருந்திருக்கலாம் என்று விரும்புகிறேன். அதற்கான தகுதி உடையவர் நீங்கள். இந்த நேரத்தில் அவரது குடும்பத்துக்கு (இந்த இழப்பைத் தாங்கும்) வலிமை கிடைக்கட்டும்".
இவ்வாறு கமல் குறிப்பிட்டுள்ளார்.