

பெருங்குடல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் இர்ஃபான் கான் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது சில வருடங்களுக்கு முன்பு தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அவருக்குத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை அன்று இர்ஃபான் கான் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் அவர் மும்பையின் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடலில் பிரச்சினை இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை பின்னிரவு, அவர் காலமாகிவிட்டதாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, அவரது செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது இர்ஃபான் கான் காலமானதாக உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த பாலிவுட்டுமே இந்த மரணம் குறித்து அதிர்ச்சியும், வருத்தமும் வெளிப்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை அன்றுதான் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். ஊரடங்கு அமலில் இருப்பதால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. வீடியோ கால் மூலமாக தனது அம்மாவுக்கான மரியாதையை இர்ஃபான் கான் செலுத்தினார். இந்நிலையில் அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.