

நூறு கோடிகளிலிருந்த இந்திய திரைப்படங்களின் அதிகபட்ச உலகளாவிய வசூலை ஆயிரம் கோடிக்கு அலேக்காக தூக்கிச் சென்ற படம் ’பாகுபலி 2’. தொட்டதெல்லாம் தங்கம் என்று சொல்லத்தக்க இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரம்மாண்டக் கனவு ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ ஆகிய இரட்டைப் படங்களாகத் திரையில் விரிந்து இந்திய சினிமாவில் பல பிரம்மாண்ட பாய்ச்சல்களை நிகழ்த்தின. இந்த இரண்டு படங்களில் இரண்டாம் பாகமான ‘பாகுபலி 2’ வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.
பாதிக் கதை முழு திருப்தி
பொதுவாக இந்திய சினிமாவில் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் எடுக்கப்படுவது 2010 வரை மிக மிக அரிதாகவே இருந்துவந்தது. இந்திய சினிமா நூற்றாண்டை நெருங்கிய ஆண்டுகளில் அதாவது 2012-13 ஆண்டுகளில் வெற்றிப் படங்களின் சீக்வல்கள் எடுக்கப்படுவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. இப்படிப்பட்ட சீக்வல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் அல்லது கருத்துரு ரீதியான (Thematic Sequel) தொடர்ச்சியாக இருக்கும். கதைரீதியான தொடர்ச்சி உள்ள சீக்வல்களில்கூட முதல் படத்தில் முழுமையான கதையாக இருக்கும்.
ஆனால் 2015 ஜூலை 10 அன்று ‘பாகுபலி’ திரைப்படத்தைப் பார்க்கச் சென்றவர்கள் பேரதிசயத்துக்கு உள்ளானார்கள். படம் முடிந்தபோது படத்தின் கதை முடியவில்லை. இரண்டாம் பாகத்தில்தான் முழுக் கதையைப் புரிந்துகொள்ள முடியும் என்ற வகையில் அந்தப் படத்தின் முடிவு அமைந்திருந்தது. இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு அசாத்திய துணிச்சல் இருந்திருக்க வேண்டும். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நிரம்பி வழிந்த பிரம்மாண்டத்தாலும் மலைக்க வைக்கும் அந்த நீண்ட போர்க் காட்சியும் முழுமையான கதை இல்லை என்பதை ஒரு குறையாகத் தோன்றவிடவில்லை.
மகிழ்மதி ராஜவம்சத்தின் அரசனாகியிருக்க வேண்டிய அமரேந்திர பாகுபலியை ராஜவிசுவாசியும் அவனால் ‘மாமா’ என்று அன்புடன் அழைக்கப்படுபவருமான கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் ‘பாகுபலி’ நிறைவடைந்தது. ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்ற கேள்வி அடுத்த இரண்டாண்டுகளுக்கு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. பல்வேறு ஊகக் கதைகள் கொடிகட்டிப் பறந்தன.
பல மடங்கு நிறைவேற்றப்பட்ட எதிர்பார்ப்பு
2017 ஏப்ரல் 28 அன்று வெளியான ‘பாகுபலி 2’ அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னது. அந்தப் பதிலைத் தெரிந்துகொள்வதற்கான இரண்டு ஆண்டு காத்திருப்பால் ஏற்பட்ட எதிர்பார்ப்பை முற்றிலும் நிறைவேற்றுவதாக இருந்தது அந்தப் பதில். இது மட்டுமல்ல. இரண்டாம் பாகத்தில் ஒரு முழுமையான கதை இருந்தது. அமரேந்திர பாகுபலியின் (பிரபாஸ்) முன்கதையில் அவனுக்கு மட்டுமல்லாமல் அவனது காதல் மனைவியான தேவசேனா (அனுஷ்கா), வளர்ப்பு அன்னையும் ராஜமாதாவுமான சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்), கட்டப்பா (சத்யராஜ்), பாகுபலியைக் கொல்லத் துடிக்கும் சிவகாமியின் மகன் பல்வாள்தேவன் (ராணா), அவனது தந்தை பிங்கலத்தேவன் (நாசர்) என அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவமும் ரசிக்கத்தக்கப் பல காட்சிகளும் அமைந்திருந்தன.
பாகுபலி-தேவசேனாவின் காதல் அவர்களது திருமணத்தை ஒட்டி ஏற்படும் ராஜதந்திர ரீதியான சர்ச்சைகள், இடையில் திருமணத்துக்குப் பின் ராஜமாதாவுக்கும் தேவசேனாவுக்கும் இடையில் ஏற்படும் நீதிநெறி சார்ந்த வேற்றுமைகள், மனஸ்தாபங்கள், இவற்றில் பாகுபலி ஆற்றும் பங்கு, கட்டப்பாவுக்கும் பாகுபலிக்கும் இடையிலான பாசப் பிணைப்பு என ராஜா காலத்துக் கதையில் உணர்வுபூர்வமான பல அம்சங்களை இணைத்து கச்சிதமான ஒரு கதையையும் சுவாரஸ்யமான திரைக்கதையும் அமைத்திருந்தார் ராஜமெளலி. அதோடு முதல் பாகத்தில் வாய்பிளக்க வைத்த பிரம்மாண்டம் இந்தப் படத்தில் இரட்டிப்பாகிப் பல இடங்களில் ஒட்டுமொத்த உடலையும் சிலிர்க்க வைத்தது. இடைவேளையிலும் இறுதிக் காட்சியிலுமாக ஒன்றுக்கு இரண்டு பிரம்மாண்ட போர்க் காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களைக் குதூகலிக்க வைத்தன.
பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களின் முன்னோடி
’பாகுபலி’, ‘பாகுபலி 2’ இரண்டுமே தெலுங்கு, தமிழ், இந்தி என பன்மொழிப் படங்களாக எடுக்கப்பட்டன. அனைத்து மொழிகளிலும் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘பாகுபலி 2’. ஆனால் அதைவிட முக்கியமான சாதனை இவ்வளவு பிரம்மாண்டமான வரலாற்றுப் புனைவுத் திரைப்படங்களை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தென்னிந்தியத் திரைப்படத் துறையினருக்கு ஏற்படுத்தியதுதான். இந்தப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால்தான், பல ஆண்டுகளாகப் பலரால் முயன்றும் தொடங்க முடியாத கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ‘ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது. ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தொடக்கத்துக்கு ‘பாகுபலி’ படங்களின் வெற்றியும் உலக நாடுகள் பலவற்றில் மக்கள் அளித்த வானளாவிய வரவேற்பும் முக்கிய உந்து சக்தி.
இது மட்டுமில்லாமல் இன்னும் பல பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களுக்குத் தென்னிந்திய சினிமா திட்டமிட்டுவருகிறது. மலையாளத்தில் விக்ரமை நாயகனாக வைத்து மகாபாரதக் கதாபாத்திரமான கர்ணனின் கதை படமாகிவருகிறது, இன்னும் பல வரலாற்றுப் படங்களுக்கும் அவற்றின் வெற்றிக்கும் ‘பாகுபலி-2’வின் சாதனைதான் முன்னோடி. இதற்கு முன்பும் பல பிரம்மாண்டத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன என்றாலும் ‘பாகுபலி 2’ பல வகைகளில் பிரம்மாண்டத் திரைப்படங்களின் புதிய உச்சம் எனலாம்.