Published : 28 Apr 2020 04:28 PM
Last Updated : 28 Apr 2020 04:28 PM

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம்: சூர்யா

ஜோதிகாவின் கருத்தில் உறுதியாகவே இருக்கிறோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தனியார் விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அதில், கோயில்களைக் குறித்துப் பேசிய விஷயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதனிடையே, இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"'மரம்‌ சும்மா இருந்தாலும்‌ காற்று விடுவதாக இல்லை' என்கிற கருத்து 'சமூக ஊடக' விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்‌. ஒரு விருது வழங்கும்‌ விழாவில்‌ எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில்‌ செய்தியாகவும்‌, சமூக ஊடகங்களில்‌ விவாதமாகவும்‌ மாறி இருக்கிறது.

'கோயில்களைப்‌ போலவே பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ உயர்வாகக் கருத வேண்டும்‌' என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை, 'சிலர்‌' குற்றமாகப் பார்க்கிறார்கள்‌. இதே கருத்தை விவேகானந்தர்‌ போன்ற ஆன்மிகப்‌ பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள்‌. 'மக்களுக்கு உதவினால்‌, அது கடவுளுக்குச்‌ செலுத்தும்‌ காணிக்கை' என்பது 'திருமூலர்‌' காலத்துச் சிந்தனை. நல்லோர்‌ சிந்தனைகளைப்‌ படிக்காத, காது கொடுத்துக் கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.

பள்ளிகளையும்‌, மருத்துவமனைகளையும்‌ இறைவன்‌ உறையும்‌ இடமாகக் கருத வேண்டும்‌ என்ற கருத்தை, எல்லா மதத்தைச்‌ சேர்ந்தவர்களும்‌ வரவேற்கவே செய்கின்றனர்‌. 'கரோனா தொற்று' காரணமாக இயல்பு வாழ்க்கை‌ பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும்‌, எங்களுக்குக் கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும்‌, மகிழ்ச்சியையும்‌ அளித்தது.

அறிஞர்கள்‌, ஆன்மிகப்‌ பெரியவர்களின்‌ எண்ணங்களைப்‌ பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக்‌ கருத்தில்‌ நாங்கள்‌ உறுதியாகவே இருக்கிறோம்‌. “மதங்களைக்‌ கடந்து மனிதமே முக்‌கியம்‌' என்பதையே எங்கள்‌ பிள்ளைகளுக்கும்‌ சொல்லித்தர விரும்புகிறோம்‌. தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர்‌ அவதூறு பரப்பும்‌ போதெல்லாம்‌, நல்லோர்கள்‌, நண்பர்கள்‌, ரசிகர்கள்‌ எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்‌.

முகமறியாத எத்தனையோ பேர்‌ எங்கள்‌ சார்பாக பதில்‌ அளிக்கிறார்கள்‌. ஊடகங்கள்‌ சரியான விதத்தில்‌ இச்சர்ச்சையைக்‌ கையாண்டன. 'நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்‌' என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச்‌ செய்கிறார்கள்‌. எங்களுக்கு உறுதுணையாக நிற்கும்‌ அனைவருக்கும்‌ எங்களின்‌ நெஞ்சார்ந்த நன்றிகள்‌".

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x