Published : 27 Apr 2020 03:53 PM
Last Updated : 27 Apr 2020 03:53 PM

'சென்னை 28' வெளியாகி 13 ஆண்டுகள்: கே.பாலசந்தர் எழுதிய கடிதத்தைப் பொக்கிஷமாகக் கருதும் வெங்கட் பிரபு; சுவாரசியப் பின்னணி

'சென்னை 28' படம் வெளியானபோது இயக்குநர் வெங்கட் பிரபுவைப் பாராட்டி இயக்குநர் பாலசந்தர் ஒரு கடிதம் எழுதினார். அதைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார் வெங்கட் பிரபு.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் இயக்குநராக அறிமுகமான படம் 'சென்னை 600028'. எஸ்.பி.சரண் தயாரித்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, சம்பத் ராஜ், இளவரசு, விஜயலட்சுமி என ஒரு பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்தனர். யுவன் இசையமைப்பாளராக பணிபுரிந்த இந்தப் படத்துக்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (ஏப்ரல் 27) 13 ஆண்டுகள் முடிந்துள்ளன. இதனை முன்னிட்டு இணையத்தில் பலரும் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெங்கட் பிரபுவிடம் பேசும்போது, அவர் இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதத்தைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருவதாகக் கூறினார்.

'சென்னை 600028' படம் வெளியானபோது, அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதம்:

"அன்புள்ள வெங்கட் பிரபுவுக்கு,

முதற்கண் எனது இதயப்பூர்வமான பாராட்டுகளும், வாழ்த்துகளும், தங்களது 'சென்னை 600028'க்கு...

'லகான்' தங்களுக்கு ஒரு ஆரம்பித்துணிவைத் தந்திருக்கிறது என்றாலும் எத்தனை தமிழ் சினிமா பிரபலங்களுக்கு அந்தத் துணிச்சல் வந்தது? நான் உள்பட! உங்களால் தான் அது முடிந்திருக்கிறது. அந்த வயதுப் பிள்ளைகள் இப்படித்தான் அதிரடி அட்டகாசங்கள் செய்வார்கள்; தண்ணி அடிப்பார்கள்; 'லவ்' அடிப்பார்கள். அந்த 'லவ்'வும் 'RAW'வாகத்தான் இருக்கும். சினிமாத்தனமான எதுகை மோனையோடு டூயட் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

எனும் இன்னபிற விஷயங்களில் உங்களது நேர்மையான பார்வை என்னை மிக மிகக் கவர்ந்தது. சலிப்போ, அலுப்போ இல்லாத இரு திரைக்கதையமைப்பையும், வசனக் கையாடல்களையும் அந்த வயது விடலைகளைப் போலவே, RESTLESS ஆகத் துள்ளித்திரியும் கேமரா கோணங்களையும் பார்த்தபோது, தேர்ச்சி பெற்ற ஒரு செல்லுலாய்டு மாணவனின் தங்கப்பதக்கம் பெற்ற ஒரு திரைப்படம் போல் எனக்குத் தோன்றியதில் வியப்பில்லை.

யுவனின் இசை பெரிதாகக் கை கொடுத்திருக்கிறது. உங்களுடன் ஒத்துழைத்த சகோதர நண்பர்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். எஸ்.பி.சரணுக்கு இது ஒரு மகுடம். மிகப்பெரிய எதிர்காலம் தங்களை நோக்கிக் காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை."

இவ்வாறு இயக்குநர் பாலசந்தர் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x