Published : 26 Apr 2020 08:13 PM
Last Updated : 26 Apr 2020 08:13 PM

மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையானதால் அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான். தற்போது, மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக இந்தச் சர்ச்சை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான 'பட்டண பிரவேஷம்' படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்".

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x