

வெளியே அமைதியாகத் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுது கொண்டிருக்கின்றனர் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு எதுவுமே இல்லாமல் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தற்போது நடிகை குல் பனாக், 'கூல் டெக்' என்ற தொடர் வீடியோ பேட்டிகளை எடுத்து வருகிறார்.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தலாம் என்பது பற்றி பல்வேறு விருந்தினர்களிடம் கேட்டு வருகிறார். இதில் ஏ.ஆர்.ரஹ்மானும் பேட்டியளித்துள்ளார்.
இந்தப் பேட்டியில் ரசிகர்களுக்கு ஏதாவது அறிவுரை என்று கேட்டபோது, "நான் அறிவுரை சொல்பவன் அல்ல. எனக்குக் கேட்கவே பிடிக்கும். ஆனால் இதைச் சொல்கிறேன். நமக்கு எப்போதையும் விட இப்போது பச்சாதாப உணர்வு தேவை. சமூகத்தில் பின்தங்கிய மக்களை இரக்கத்துடன் பார்க்க வேண்டும். அவர்களைத் தேடிப்பிடித்து உதவ வேண்டும். அதுதான் மனிதன். நாம் செய்வதுதான் நமக்குக் கிடைக்கும். வெளியே அமைதியாகத் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுது கொண்டிருக்கின்றனர். உணவு தருவது, மருத்துவ உதவி போன்ற எளிமையான விஷயங்கள் கூட நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்
மருத்துவத் துறைக்கு வாழ்த்துகள் சொன்ன ரஹ்மான், அரசாங்கம் சொல்வதைக் கேட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். "இந்த துயரத்திலிருந்து மீள விரைவில் நமக்கு மருந்து கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுவோம். நாமும் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சென்னையில் ஆகாயத்தை இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததே இல்லை. இதை நினைவில் வைத்துக் கொள்ள புகைப்படமும் எடுத்துள்ளேன். நாம் நமது நகரங்களை நாம் எப்படிக் கட்டமைக்கிறோம் என்பது பற்றி நாம் மீண்டும் சிந்திக்க இது உதவும் என்று நினைக்கிறேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.