Published : 24 Apr 2020 05:37 PM
Last Updated : 24 Apr 2020 05:37 PM

கரோனா ஊரடங்கு: கஷ்டப்படும் ரசிகர்களுக்கு வங்கிக் கணக்கில் பணம்; விஜய் ஏற்பாடு

கரோனா ஊரடங்கினால் கஷ்டப்படும் தனது ரசிகர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் அனுப்பியுள்ளார் விஜய்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர்கள் பலரும் கடும் அவதியுற்று வருகிறார்கள். தற்போது அவர்களுக்கு அந்தந்த சங்கங்கள் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக திரையுலகப் பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் விஜய் இன்னும் நிதியுதவி அளிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இறுதியாக தன் தரப்பிலிருந்து 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். யாருக்கு எவ்வளவு தொகை என்ற விவரத்தையும் வெளியிட்டிருந்தார். இதுபோகத் தனது நற்பணி மன்றம் மூலம் தொடர்ச்சியாக உதவிகள் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தார் விஜய்.

அதில் முதல் படியாக, கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகவே பணம் அனுப்பியுள்ளார் விஜய். யாரெல்லாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற விவரத்தை அவருடைய நற்பணி மன்றத்தின் தலைவர்கள் கணக்கெடுத்து விஜய்க்குக் கொடுத்துள்ளனர்.

மத்திய சென்னை விஜய் நற்பணி மன்றத் தலைவர் பூக்கடை குமாரிடம் அவருடைய ஏரியாவில் கஷ்டப்படும் விஜய் ரசிகர்கள் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவரோ மோகன் என்ற பையன் மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவருடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் அனுப்பிவைத்துள்ளார். மோகனின் வங்கிக் கணக்கிற்கு 'விஜய் அறக்கட்டளை' வங்கிக் கணக்கிலிருந்து 10,000 ரூபாய் வந்துள்ளது. இதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார் மோகன்.

மேலும், தொடர்ச்சியாக ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சாப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் என அனைத்துமே தனது நற்பணி மன்றம் மூலமாகச் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார் விஜய். இதற்காக யாரும் கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் என்றும், மாநிலத் தலைவர்கள் மூலமாக என்ன செலவு என்று கூறினால் அதை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பி வைக்கிறார் விஜய்.

இதனிடையே, தனது நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் மூலமாக விஜய் உதவி செய்யவுள்ள தொகை தற்போது அவர் அறிவித்திருக்கும் கரோனா நிவாரண நிதியை விட அதிகம் என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.

கஷ்டப்படும் மக்களுக்கு உதவிகள் மட்டுமல்லாது, தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வரும் காவல்துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவைப்படும் உதவிகளைச் செய்ய அறிவுறுத்தியுள்ளார் விஜய்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x