Published : 23 Apr 2020 07:51 PM
Last Updated : 23 Apr 2020 07:51 PM

செலவே செய்யாமல் எடுக்கப்பட்ட கன்னடப் படம் 'மதுவே ஊடா' - எப்படித் தெரியுமா?

பணச் செலவே இல்லாமல், 0 பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மகேஷ். 'மதுவே ஊடா' என்ற கன்னடப் படத்தை எடுத்து முடித்து தற்போது வெளியீட்டுக்குத் தயாராக வைத்திருக்கிறார்.

கன்னடத்தில் 'மதுவே ஊடா' என்ற படத்தை எவ்வித செலவும் செய்யாமல் எடுத்து முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் மகேஷ். எப்படி எடுத்தேன் என்று 'தி இந்து' ஆங்கிலத்துக்கு அளித்துள்ள பேட்டியின் தமிழ் சுருக்கம்:

"என் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, பணமே முதலீடு செய்யாமல் படம் எடுக்க முடியுமா என்று சவால் விடுவதைப் போல இயல்பாகச் சொன்னர். அப்படித்தான் இந்த முயற்சி ஆரம்பமானது. என்னிடம் கதை தயாராக இருந்தது. முதலில், ராசியில்லாத மாதங்கள் என்று சொல்லப்படும். பெரும்பாலான படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் ஆடி மற்றும் மார்கழி மாதங்களில், கடந்த ஆண்டு நாங்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டோம்.

ஒரு வீடு, ஒரு அறை, டீக்கடை, சாலைகள் போன்ற இடங்களைப் படப்பிடிப்புக்குத் தேர்ந்தெடுத்தோம். இந்த இடங்களைப் படப்பிடிப்புக்காக இலவசமாகத் தர நண்பர்களைச் சந்தித்தோம். பெங்களூருவில் ஸ்டூடியோ வைத்திருக்கும் எந்த நண்பர், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இலவசமாக எங்களுக்குக் கேமரா கொடுத்து உதவினார். எனவே ஞாயிற்றுக்கிழமை உட்படத் தொடர்ந்து 25 நாட்கள் வேலை செய்தோம். டப்பிங், இசை சேர்ப்பு போன்ற விஷயங்களும் இதே போல நண்பர்கள் உதவியால் இலவசமாக முடிந்தது.

படத்தில் மொத்தம் 10 நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவும் சிறியதே. அனைவரும் நண்பர்கள். இலவசமாக வேலை செய்தார்கள். காலை 6 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை மட்டுமே படப்பிடிப்பு பெரும்பாலும் நடந்தது. எனவே நடிகர்கள் அவரவர் அலுவலக வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க 75 நாட்கள் ஆனது.

சரியாக வெளியீடு திட்டமிட்டிருக்கும்போது இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஆனால் காத்திருப்பதில் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்த நேரத்தை, சமூக ஊடகங்களில் எங்கள் படத்தை விளம்பரம் செய்ய எடுத்துக் கொள்கிறோம்" என்று கூறுகிறார் மகேஷ்.

ஆடி, மார்கழி மாத படப்பிடிப்பை அபசகுனம் என்றோ, படத்தைப் பாதிக்கும் என்றோ நினைக்கவில்லையா என்று கேட்டால், "இல்லவே இல்லை, எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என்ற நம்பிக்கையில் நான் வளர்ந்தேன். எனவே அபசகுனம் என்று நினைப்பது மனரீதியான விஷயமே. நல்லது நினைத்தால், நல்லதே நடக்கும்" என்று நம்பிக்கையுடன் கூறி முடிக்கிறார் மகேஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x