Published : 23 Apr 2020 04:51 PM
Last Updated : 23 Apr 2020 04:51 PM

கேட்காமலேயே ரஜினி உதவி: இயக்குநர்கள் சங்கம் நெகிழ்ச்சி

இயக்குநர்கள் சங்கம் கேட்காமலேயே ரஜினி உதவி செய்திருப்பதால் மிகவும் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு பணிகளுமே நடைபெறாமல், கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரி தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப் பலரும் கடும் அவதிக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அப்போது பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு ரஜினி நிதியுதவி அளிக்கவில்லை.

இதனிடையே, இயக்குநர்கள் சங்கத்துக்கு ரஜினி பொருளுதவி செய்திருக்கிறார். அதுவும் இயக்குநர்கள் சங்கம் வேண்டுகோள் விடுக்காமலேயே இந்த உதவியை ரஜினி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1500 பேருக்கு உதவும் வகையில் 10 கிலோ எடை கொண்ட அரசி மூடைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பியுள்ளார்.

இந்த உதவியால் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளது இயக்குநர்கள் சங்கம். இது தொடர்பாக ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இன்றைய கோவிட் 19 வைரஸ் எதிர்ப்பில் தொழிலின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் உங்கள் கலைக் குடும்பத்தின் இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் கிடைக்கப் பெற்றோம். குறிப்பறிந்து கேட்காமலேயே, உங்கள் கலைக்குடும்ப சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளத்தை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும் குடும்பம் நீடுழிவாழட்டும்"

இவ்வாறு இயக்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x