

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மாஸ்டர்' திரைப்படம் 5 மொழிகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
கரோனா ஊரடங்கு அனைத்தும் முடிந்தவுடன், படத்தைத் தணிக்கைக்கும் விண்ணப்பிக்கவுள்ளார்கள். மே 3-ம் தேதி இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் பட்சத்தில் உடனடியாக படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க 'மாஸ்டர்' படக்குழு முடிவு செய்துள்ளது.
இதனிடையே இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் வெளியாவது உறுதியாகி இருந்தது. தற்போது ஐநாக்ஸ் திரையரங்கம் வெளியிட்டுள்ள ட்வீட்டின் மூலம் 'மாஸ்டர்' திரைப்படம் 5 மொழிகளில் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் 'மாஸ்டர்' வெளியாகும் என தங்களுடைய ட்விட்டர் பதிவில் ஐநாக்ஸ் திரையரங்கம் குறிப்பிட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் முடிவு வந்து நிலைமை சரியானால், ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளைக்கு 'மாஸ்டர்' வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.