

அட்லியுடன் அடுத்த படம் என்ற ரசிகரின் கேள்விக்கு ஷாரூக் கான் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான படம் ‘ஜீரோ’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் தோல்வியைத் தழுவியது. இதற்குப் பிறகு 'லயன் கிங்' படத்தின் இந்தி டப்பிங்கில், தனது மகனுடன் இணைந்து குரல் கொடுத்ததைத் தாண்டி இன்று வரை ஷாரூக் கான் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
இதனிடையே, இன்று (ஏப்ரல் 20) ட்விட்டரில் நீண்ட நாட்கள் கழித்து #AskSRK என்ற ஹேஷ்டேகில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் ஷாரூக் கான். நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுடன் உரையாடுவதால், இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
இதில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு ஷாரூக் கான் பதிலளித்திருந்தார். ரசிகர் ஒருவர் ‘எப்போது அட்லி, ராஜ்குமார் ஹிரானி, சித்தார்த் ஆனந்த் ஆகியோருடன் பணிபுரியப் போகிறீர்கள்? என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஷாரூக் கான், ''உங்களிடமும் ஸ்கிரிப்ட்களை அனுப்பி வைக்கட்டுமா? கவலைப்பட வேண்டாம் நண்பா, இன்னும் நிறைய படங்கள் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.
தனது அடுத்த படம் யாருடன் என்பது குறித்து ஷாரூக் கான் மழுப்பலாகப் பதில் கூறியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
'ஜீரோ' படத்துக்குப் பிறகு அட்லி இயக்கத்தில் ஷாரூக் கான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியது. ஆனால், அதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.