Published : 20 Apr 2020 10:17 PM
Last Updated : 20 Apr 2020 10:17 PM

மருத்துவர் ஜெயமோகனின் பெயரில் மருத்துவ சேவைகள்: லாரன்ஸ் முடிவு

மருத்துவர் ஜெயமோகனின் பெயரில் மருத்துவ சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜெயமோகன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துவிட்டு, கடந்த 3 ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் மலைப் பகுதியில் இருக்கும் தெங்குமரஹடா எனும் குக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று ஜெயமோகன் மருத்துவ உதவிகளைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

இவருடைய மறைவுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி, பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். தற்போது நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயமோகன் மறைவு குறித்து லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"மருத்துவர் ஜெயமோகனின் மரணம் எனக்கு மிகுந்த சோகத்தையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் வாழும் மக்களுக்காக ஆத்மார்த்தமாக பணியாற்றிய அவரது மனிதநேயத்துக்கு நான் தலைவணங்குகிறேன். இதையும் இதோடு மற்ற சேவைகளையும் செய்ய விரும்புகிற மருத்துவர்களின் உதவியோடு அந்த கிராமத்தில் ஜெயமோகனின் பெயரால் எதிர்காலத்தில் மருத்துவ சேவைகளுக்கான முன்னெடுப்பை மேற்கொள்கிறேன். அவரது ஆன்மாவுக்கு நான் செய்யும் மரியாதை இது"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x