Published : 20 Apr 2020 12:29 PM
Last Updated : 20 Apr 2020 12:29 PM

சீரியல் படப்பிடிப்புகள் எப்போது? அமைச்சர் கூறியது என்ன? - குஷ்பு விளக்கம்

சீரியல்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கலாம், இது தொடர்பாக அமைச்சர் கூறியது என்ன என்பது குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகின. தொலைக்காட்சி நிறுவனங்களும் சீரியல்களில் அடுத்தடுத்த எபிசோட்கள் இல்லாமல், பழைய நிகழ்ச்சிகள் மற்றும் ஹிட்டடித்த சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

இதனிடையே, தற்போதுள்ள சூழல்படி மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி படப்பிடிப்புக்குச் சென்று, மே 11-ம் தேதியிலிருந்து எபிசோட்கள் வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியான.

இது தொடர்பாக குஷ்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தொலைக்காட்சிகளிலிருந்து மே 5-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கி, மே 11-ம் தேதி நிகழ்ச்சிகள் வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். செல்வமணி சாரிடம் பேசினேன். யோசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசினேன். அவரோ, ரேபிட் டெஸ்ட் இப்போதுதான் பண்ணப் போகிறோம். இனிமேல்தான் எவ்வளவு இருக்கிறது என்று தெரியும். ஆகையால் ஏப்ரல் 26, 27-ம் தேதி வாக்கில்தான் எப்போது உங்களுடைய வேலைகளை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல முடியும். அதே சமயத்தில் நீங்கள் அனைவரையும் கூப்பிட்டுப் படப்பிடிப்பு செய்வது சாத்தியமே இல்லை. முக்கியமான ஆட்களை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தினால் போதும். ஜூனியர் நடிகர்களைத் தவிர்த்துவிட்டு, வெளிப்புற படப்பிடிப்புக்குச் செல்லாமல் படப்பிடிப்பு செய்யவேண்டும்.

படப்பிடிப்புத் தளத்தில் அனைவருமே மாஸ்க் போட்டுக் கொண்டுதான் வேலையே செய்ய வேண்டும். மாஸ்க் போடாமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மறுபடியும் இப்படியான சூழலுக்கு ஆளாக வேண்டாம். படப்பிடிப்பு எப்போது என்பதை தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசிவிட்டுத்தான் சொல்ல முடியும். செல்வமணி சாரும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். என்னிடமும், செல்வமணி சாரிடமும் அமைச்சர் விஜயபாஸ்கர் இதைத்தான் சொல்லியிருக்கிறார்.

மே 11-ம் தேதியிலிருந்து நிகழ்ச்சிகள் வேண்டுமென்றால் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் நான் பேசியிருப்பதையும், செல்வமணி சார் சொன்னதையும் கூறுங்கள். ரேபிட் டெஸ்ட் தொடங்கியிருப்பதால் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. என்றைக்கு படப்பிடிப்புக்குப் போகலாம் என்பதையே 25-ம் தேதிக்கு மேல்தான் சொல்ல முடியும். மே 11-ம் தேதிக்குப் பதிலாக இன்னும் ஒரு வாரம் தள்ளிவைத்தால், இன்னும் கொஞ்சம் தெளிவான கண்ணோட்டத்துக்கு வர இயலும்.

மேலும், சீரியல் தயாரிப்பாளர்களே ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோடாவது படப்பிடிப்பு செய்யுங்கள். அதிகப்படியான எபிசோட்கள் எடுத்து வைத்தால்தான் நன்றாக இருக்கும். ஒவ்வொரு மீட்டிங்கிலும் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இது நமக்கு எல்லாம் ஒரு பாடமாக இருக்கும் என நினைக்கிறேன். அனைவருமே அதிகப்படியான எபிசோட்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சரியான நேரத்துக்குப் படப்பிடிப்பைத் தொடங்குங்கள். காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நமது பேட்டா இருக்கிறது. ஆகையால் காலை 7.30 மணிக்கு எப்படியாவது படப்பிடிப்பைத் தொடங்குங்கள். ஒன்றரை பேட்டா அதற்குதான் கொடுக்கிறீர்கள். இனிமேல் நேரத்தை வீணாக்க வேண்டாம். ஒவ்வொரு நிமிடமும் பணம் என்பதைப் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அனைவருமே கொஞ்சம் பொருட்செலவைப் பார்த்துப் பணிபுரியுங்கள். அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x