

'சென்னை 28' குழுவினர் ஒன்றிணைந்து நடித்து வெளியிட்டுள்ள கரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் கரோனா ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே.
பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தொடர்ச்சியாக வெளியே வருவதை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், இந்தச் சமயத்தில் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி வேண்டுகோள் விடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.
தற்போது, ’சென்னை 28’ படக்குழுவினர் இணைந்து அவர்களுடைய பாணியில் காமெடியாக ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். அனைவருமே வீட்டிலிருந்துக் கொண்டே இதில் நடித்துக் கொடுத்துள்ளனர். இந்த வீடியோவுக்கான ஐடியாவை இயக்குநர் வெங்கட் பிரபு உருவாக்கியுள்ளார்.
இதிலும் வழக்கமான அவர்களுடைய குறும்புத்தனம், சரக்கடிப்பது போன்றவையும் இடம்பெற்றுள்ளது. ஊரடங்கை மதிக்காமல் வெளியே வந்த நபர்களுக்கு காவல்துறையினர் வழங்கிய தண்டனைகள், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கைதட்டிய போது உள்ள வீடியோக்கள், விளக்கேற்றியது உள்ள வீடியோக்கள் என அனைத்துமே இந்த வீடியோவில் சேர்த்து கலாய்த்துள்ளனர்.
இறுதியாக அனைவரும் வீட்டிலேயே இருங்கள் என்று கூறி காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவருக்கும் நன்றி கூறி இந்த வீடியோவை முடித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு. அதனைத் தொடர்ந்து 'கோ கரோனா கோ' என்று அனைவரும் சொல்ல இந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோவில் நடிக்கும் போது நடிகர்களின் மனைவிகள் அதை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த வீடியோவின் இறுதியில் நன்றி தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு