Published : 17 Apr 2020 20:15 pm

Updated : 17 Apr 2020 20:15 pm

 

Published : 17 Apr 2020 08:15 PM
Last Updated : 17 Apr 2020 08:15 PM

'கில்லி' வெளியாகி 16 ஆண்டுகள்: அனைத்து வயதினருக்கும் பிடித்த படம்

ghilli-release-date

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி எப்போதும் ரசிக்கப்படுபவையாக இருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் 16 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியில் (2004 ஏப்ரல் 17) வெளியானது ‘கில்லி’. இந்தப் படம் காலம் கடந்து ரசிக்கப்படுவதற்குச் சான்றாக அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டபோது சமூக ஊடகங்களில் இந்தப் படத்தைப் பாராட்டும் பதிவுகள் அதிகரித்தன. அப்பதிவுகளை எழுதிய இளைஞர்கள் பலர் படம் வெளியானபோது விவரம் அறியாத சிறுவர்களாகவோ குழந்தைகளாகவோ இருந்திருப்பார்கள்.

குடும்பங்களைக் கவர்ந்த படம்


ஏ,பி,சி என ஆல் சென்டரிலும் ஹிட்டடித்து இந்தப் படம் அனைத்து வயதினருக்கும் பிடித்த படமாக அமைந்தது. கோடை காலத்தில் சுற்றுலாத் தளங்களுக்கும் தீம் பார்க்குகளுக்கும் சென்றுகொண்டிருந்த குடும்பங்களைத் திரையரங்குகளை நோக்கிப் படையெடுக்க வைத்த படம் 'கில்லி'.

இந்தப் படம் வெளியாவதற்கு முந்தைய ஆண்டு தீபாவளிக்கு ‘திருமலை’ வெளியாகியிருந்தது. அதுவரை சில தோல்விப் படங்களால் தத்தளித்துக்கொண்டிருந்த விஜய்க்கு அந்தப் படத்தின் வெற்றி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. தவிர விஜய்யின் ஆக்‌ஷன் ஹீரோ இமேஜை வலுவாகப் பதிவு செய்தது ரமணா இயக்குநராக அறிமுகமான அந்தப் படம். அதைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான 'கில்லி'யும் பரபரப்பான ஆக்‌ஷன் படம்தான். ஆனால் இதில் ஆக்‌ஷன் மட்டுமில்லாமல். காமெடி, சென்டிமென்ட், காதல், என அனைத்தும் சிறப்பாகவும் சரிவிகிதத்திலும் அமைந்திருந்தன. அதுவே இதை அனைவருக்கும் பிடித்த படமாக்கியது. அஜித் ரசிகர்களுக்குக்கூட இந்தப் படம் பிடித்துப்போனது என்றால் மிகையில்லை.

தமிழ்ப் பதிப்பின் தனித்தன்மை

‘ஒக்கடு’ என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்தான் என்றாலும் தமிழ்ப் பதிப்பின் தனித்தன்மையும் கூடுதல் சிறப்புகளும் வாய்க்கப் பெற்றிருக்கும். ‘தில், ‘தூள்’ என்று அடுத்தடுத்து ஆக்‌ஷன் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருந்த தரணி விஜய்யின் ஆளுமைக்கேற்ற மாஸ் காட்சிகளையும் வசனங்களையும் அமைத்திருப்பார். அதேபோல் விஜய்யின் சிறப்புத் திறமைகளான நடனம், நகைச்சுவை ஆகியவையும் சிறப்பாக மிளிரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பார். அதேபோல் தோற்கடிக்க முடியாத கபடி வீரராக விஜய்யின் உடலமைப்பும் உடல் மொழியும் கச்சிதமாக அமைந்திருக்கும்.

ரசிக்கவைக்கும் கதாபாத்திரங்கள்

காவல்துறை அதிகாரி மற்றும் விஜய்யின் கண்டிப்பு மிக்க தந்தையாக ஆஷிஷ் வித்யார்த்தி, அப்பாவி அம்மாவாக ஜானகி சபேஷ், துடுக்குத்தனமான தங்கையாக ஜெனிபர் என அந்தக் குடும்பமே ரசிக்கத்தக்கதாக இருக்கும். குடும்பத்தினரின் பாசப்பிணைப்பை வைத்து சென்டிமென்ட் மட்டுமல்ல ரசனையான காமெடிக் காட்சிகளையும் தர முடியும் என்று நிரூபித்த படம் 'கில்லி'.

பிரகாஷ் ராஜ் இதற்கு முன் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் அவர் பெயரைச் சொன்னாலே இந்தப் படத்தின் முத்துப்பாண்டி கதாபாத்திரமும் அவர் ‘செல்லம்’ என்ற சொல்வதும்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பிரகாஷ் ராஜும் அவரது நடிப்பும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தன. தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்களால் நேசிக்கப்பட்ட வில்லன்களில் முத்துப்பாண்டி பிரகாஷ் ராஜுக்கு முக்கியமான இடம் உண்டு.

த்ரிஷாவின் இரண்டாம் வெற்றிப் படம் ‘கில்லி’. 2003 கோடைக்கு வெளியான ‘சாமி’ படத்துக்குப் பிறகு ‘கில்லி’தான் அவருக்கு முக்கியமான வெற்றிப் படமாக அமைந்ததோடு முன்னணிக் கதாநாயகி அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. ‘ஷா லா லா ஷா லா லா” என்ற வெள்ளைத் தாவணி அணிந்து ஆடும் அவருடைய அழகை ரசிகர்களின் மனங்களில் பசுமையான நினைவுகளாகத் தங்கிவிட்டன.

மனதில் ஒட்டிக்கொண்ட அம்சங்கள்

தரணியுடனான இசையமைப்பாளர் வித்யாசாகரின் வெற்றிக் கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்ந்தது. ‘அர்ஜுனரு வில்லு’ காட்சிக்கேற்ற பரபரப்பைக் கூட்டியது என்றால் ‘அப்படிப் போடு’ அனைத்து வயதினரையும் ஆட்டம் போட வைத்தது.

விலாசமான மொட்டை மாடி, லைட் ஹவுஸ் செட், கபடிப் போட்டிகள், போட்டி நடக்கும் மைதானங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை நோக்கிச் செல்லும் வீதி, த்ரிஷாவைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு விஜய் வரும் ஜீப் என ’கில்லி’ படத்தின் மறக்க முடியாத அம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

விறுவிறுப்புக்கு விளக்கம் தந்த திரைக்கதை

எல்லாவற்றுக்கும் மேலாக இயக்குநர் தரணியின் பரபரப்பான திரைக்கதையே இந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக் காரணம். படத்தைத் திரையரங்குகளில் முதன்முறையாகப் பார்ப்பவர்கள் இடைவேளை வரும்போது ‘இவ்வளவு சீக்கிரம் ஃபர்ஸ்ட் ஆஃப் முடிஞ்சுடுச்சா” என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்த அளவுக் காட்சிகள் பரபரப்பாக நகரும். இரண்டாம் பாதியும் இறுதிவரை தொய்வில்லாமல் நகரும்.

க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவும் ஆஷிஷ் வித்யார்த்தியும் விஜய்யின் வலிமையைப் புகழும் வசனங்களைப் பேசுவதெல்லாம் ரசிகர்களுக்கு இன்ப விருந்தாக அமைந்த மாஸ் வசனங்கள் (வசனங்களை எழுதியவர் இயக்குநர் பரதன்). அப்படிப்பட்ட காட்சிகளும் வசனங்களையும் மீண்டும் உருவாக்கவே முடியாது. விறுவிறுப்பு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தந்த திரைக்கதை என்று ‘கில்லி’ திரைக்கதையைச் சொல்லலாம்.

ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. சில திரையரங்குகளில் 200 நாட்கள் வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது (2004 இல் இது மிகப் பெரிய சாதனை) விஜய்யின் அடுத்த படமான ‘மதுர’ வந்த பிறகும் ‘கில்லி’ ஓடிக் கொண்டிருந்தது. விஜய் இன்று அடைந்திருக்கும் உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு வலுவான அடித்தளமிட்ட படம் ‘கில்லி’ என்றால் மிகையில்லை. ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அவரைக் கொண்டு சேர்த்த படம் அதுதான்.

தவறவிடாதீர்!


கில்லிகில்லி வெளியான நாள்கில்லி ஸ்பெஷல்விஜய்த்ரிஷாபிரகாஷ்ராஜ்இயக்குநர் தரணிவித்யாசாகர்ஆதிஷ் வித்யார்த்திஏ.எம்.ரத்னம்விஜய் ரசிகர்கள்விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author