Published : 16 Apr 2020 01:56 PM
Last Updated : 16 Apr 2020 01:56 PM

இன்று நிழல்கள் ரவியின் 67-வது பிறந்த நாள்: குரலால் நடிகன் ஆன சுவாரஸ்யப் பின்னணி

சினிமாவில் நடிகராக அறிமுகமாகி வெற்றி பெற்றுவிட்டவர்களைப் பேட்டி எடுத்தால், அப்போது ‘நீங்கள் சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?’ என்ற வழக்கமான கேள்வியைத் தவிர்க்கமுடியாது. ஆனால், சமீபத்தில் நிழல்கள் ரவியைச் சந்தித்துப் பேட்டி கண்டபோது அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் கூறியபோது, உண்மையாகவே சினிமா நடிப்பு என்பது நிழல்கள் ரவிக்கு உண்மையாகவே ஒரு விபத்தாக அமைந்துபோனதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்!

500 படங்களில் வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட வேடங்கள் திரை நடிப்பு, 100 படங்களுக்கு குரல் நடிப்பு, 1000 எபிசோட்கள் தொலைக்காட்சித் தொடர் நடிப்பு, கடைசியாக, அமிதாப் பச்சன் தொகுத்தளித்த ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பப்பட்டபோது அதற்கு குரல்கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் என பல சாதனைகளைப் படைத்திருக்கும் நிழல்கள் ரவிக்கு இன்று 67-வது பிறந்த நாள். இன்று சினிமா, சின்னத்திரை ஆகியவற்றுடன் ஒரு அனிமேஷன் அகாடெமியையும் சென்னையின் மயிலாப்பூரில் நடத்திக்கொண்டிருக்கிறார்.

குரலால் நேர்ந்த விபத்து

கோயம்புத்தூரில் பிறந்து, வளர்ந்து, பட்டப்படிப்பை முடித்து சென்னை வந்து வேலை தேடிக்கொண்டிருந்தார் நிழல்கள் ரவி. அதன்பிறகு அந்த விபத்து எப்படி நடந்து என்பதை அவரே விவரித்தார். “எனது குரல்தான் எனக்கு முதல் வாய்ப்பையே வாங்கிக்கொடுத்தது.

கோவையில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டேன். தி. நகரில் இன்று ரெட் ரோஸ் பில்டிங்காக இருக்கும் வீட்டில் அன்று 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தின் படப்பிடிப்பு. ‘நினைவோ ஒரு பறவை’ பாடல் காட்சியை பாரதிராஜா ஷூட் செய்துகொண்டிருந்தார். நான் அருகில்தான் குடியிருந்தேன். படப்பிடிப்பைப் பார்க்க ஆசை. நானும் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன். மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜ் என்று ஏகப்பட்ட உதவியாளர்கள். உதவியாளர் ஒருவரை அருகே அழைத்து “ ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் விஜயனுக்குப் பொருத்தமாக இருக்கிறமாதிரி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் வேணும், தேடிப்பிடிங்க”ன்னு சொன்னார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் உடனே இடையில் மூக்கை நுழைத்தேன். “சார் நான் நல்லா டப்பிங் பேசுவேன் சார்” என்றேன். எனது ஆர்வத்தைக் கண்ட பாரதிராஜா “நாளை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்துடுங்க” என்றார்.

நான் டப்பிங் தியேட்டரைப் பார்த்ததுகூட கிடையாது. மறுநாள் பிரசாத் ஸ்டுடியோ சென்றதும் சவுண்ட் இன்ஜினீயரிடம் அழைத்துச் சென்று எனக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுத்தார்கள். கொஞ்சநேரத்தில் பாரதிராஜா வந்தார். அவரிடம் சவுண்ட் இன்ஜினீயர் “எங்க சார் பிடிச்சீங்க இந்தப் பையனை?! நல்ல மெட்டாலிக் வாய்ஸ். கணீர்னு இருக்கு.” என்றார். எனக்கு சந்தோஷத்துல கைகால் நடுங்கத் தொடங்கிவிட்டது. மறுநாள் பல காட்சிகளுக்கு டப்பிங் பேசிவிட்டேன். அதற்கும் அடுத்தநாள் சென்றபோது எனக்குப் பதிலாக இயக்குநரே டப்பிங் பேசிக்கொண்டிருந்தார். என்னடா இது! முந்தாநாள்தானே நமது குரலை மெட்டாலிக் வாய்ஸ் என்று பாராட்டிக்கொண்டிருந்தார்கள் என்று குழப்பத்தோடு உட்கார்ந்திருந்தேன். பிறகு மதிய உணவு இடைவேளையில் டப்பிங் அறையைவிட்டு வெளியே வந்தார் பாரதிராஜா. என்னைக் கண்டதும் தோளில் தட்டிக்கொடுத்தபடி “விஜயன் மலையாள ஸ்லாங்கில பேசியிருக்கார். அதை மேனேஜ் பண்ணிப் பேசணும். அதனால நானே பேசிட்டேன். எனிவே.. நீங்க நம்ம படத்துல நடிக்கிறீங்க. படிச்சுட்டு வேலைதேடுற ஒரு பட்டதாரியோட கதை’ அடுத்த படத்துல நடிக்கத் தயாரா இருங்க” என்றார். இப்படித்தான் என் குரல் என்னை நடிகனாக்கியது. எனது குரலை மீண்டும் அங்கீகரிக்கும்விதமாக ‘பொம்மலாட்டம்’ படத்தில் நானா படேகருக்கு குரல் கொடுக்க வைத்தார் பாரதிராஜா.

விலகிப்போன வில்லன் பிம்பம்

நிழல்கள் ரவியைப் பற்றிப்பேசும்போது ஒரு விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்தும், அவர் பல கொடூரமான வில்லன் வேடங்களில் நடித்திருந்தாலும் வில்லன் நடிகர் என்ற இமேஜ் அவர் மீது படிந்தே கிடையாது. அவரிடமே இந்த அதிசயம் பற்றிக் கேட்டுவிட்டேன். “நானே ஒரு கட்டத்தில் பயந்திருக்கிறேன். எங்கே நம்பியார் சாமிக்கு நடந்ததுபோல் வெளியிடங்களில் நம்மைப் பார்த்தால் ரசிகர்கள் சபித்துவிடுவார்களோ என்று. என் மீது வில்லன் முத்திரை முழுமையாகப் பதியாமல் போனதற்குக் காரணம், எனக்குத் தகுதியான நூற்றுக்கணக்கான குணச்சித்திரக் கதாபாத்திரங்களைத்தான் தமிழ் சினிமா தொடர்ந்து கொடுத்திருக்கிறது. என்றாலும் ‘நிழல்கள்’, ‘நாயகன்’, ‘மறுபடியும்’ ‘நான் பிடிச்ச மாப்பிள்ளை’ என்று ஐநூறு படங்களில் 50 படங்களை தனியே எடுத்துவிடலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எனக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து என்னைச் செதுக்கியவர் நடிகர் பாலாஜி.

வில்லன் பிம்பத்திலிருந்து நான் ‘ஜம்ப்’ ஆனதற்கு எனது முக அமைப்பும் ஒரு காரணம். ஏனென்றால் என் முகத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மோல்ட் செய்துகொள்ளலாம். படம் முடியும்வரை இவன் நல்லவனா கெட்டவனா என்ற குழப்பத்திலேயா என் மீது கண்களைக் குவித்திருப்பார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தின் முடிவில் நான் கெட்டவனாக இருப்பேன். இதுபோன்ற கதாபாத்திரங்களைத் திரும்பத் திரும்ப நான் எத்தனை முறை ஏற்று நடித்தாலும் ரசிகர்களுக்கு என் மீது அதே குழப்பம் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருக்கும். இந்த அம்சம் எல்லா நடிகர்களுக்கும் அமைந்துவிடாது. என் பலம் இதுதான். குணச்சித்திரம், ஹீரோ, வில்லன், திரும்பவும் ஹீரோ, திரும்பவும் வில்லன், மறுபடி குணச்சித்திரம் என்று எந்த ரூபத்திலும் மாறிக்கொள்வதுபோல எனக்கான பிம்பம் அமைந்துவிட்டது”.

இப்படிப்பட்ட அபூர்வக் கலைஞனிடம் சினிமா சார்ந்த மற்றொரு கனவும் இருந்தது. “ மிகச்சிறந்த இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். அவர்களது விதவிதமான பாணியை உள்வாங்கியிருக்கிறேன். நடிகன் என்ற ஒருநிலையோடு திருப்தி அடைந்துபோய்விடுவதில் எனக்கு விருப்பமில்லை. எனவேதான் திரைப்படத்தை இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஒரு நல்ல நடிகனால் சக நடிகர்களிடமிருந்து தரமான நடிப்பை வாங்கிவிடமுடியும் என்று நம்புகிறேன். திரைக்கதை வேலைகள் முடிந்துவிட்டன. பொருத்தமான நடிகர்களிடம் எனது கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்னும் சிலருக்கு எனது திரைக்கதையை மின்னஞ்சலில் அனுப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார். அவரது கனவு நிறைவேற இந்தப் பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x