Published : 15 Apr 2020 02:05 PM
Last Updated : 15 Apr 2020 02:05 PM

கரோனா வைரஸ் பாதிப்பு: கலை இயக்குநரின் மனிதநேயம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் இல்லாமல் அவதியுற்று வரும் உதவி இயக்குநர்களுக்கு கலை இயக்குநர் மற்றும் நடிகர் கிரண் உதவியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சத்தால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல், தினசரி நடிகர்களுக்கு நடிகர் சங்கம் சார்பிலும், நடிகர்களின் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சாலையோரத்தில் இருப்பவர்கள், தினசரி தொழிலாளர்கள் என ஊரடங்கால் அவதியுறுபவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சியினர், நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் என உதவிகள் செய்து வருகிறார்கள்.

இதனிடையே, உதவி இயக்குநர்களுக்கு யாரும் உதவிகள் செய்வதில்லை. ஏனென்றால், இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்வார்கள். ஆனால் பல உதவி இயக்குநர்கள் முதல் படத்திலேயே இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதில்லை. அவ்வாறு உறுப்பினர் இல்லாமல் கஷ்டப்படும் உதவி இயக்குநர்களின் நிலையைப் புரிந்த கலை இயக்குநர் கிரண் தனது ட்விட்டர் பக்கம் மூலம் நிதியுதவி அளித்துள்ளார்.

உதவி இயக்குநர்களுக்கான உதவி தொடர்பாக கிரண் தனது ட்விட்டர் பதிவில், "சினிமாவில் பணிபுரிபவர்களில் எனக்குத் தெரிந்தவரை அங்கீகாரம் அதிகம் கிடைக்காதவர்கள் உதவி இயக்குநர்களே. அதிலும் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றால் மிக மோசம். அதனால் அப்படி யாராவது தம்பிகள் இருந்தால் உங்கள் கூகுள் பே எண்ணை அனுப்பினால், என்னால் இயன்ற சிறு உதவியை உங்களுக்கு அளிக்கிறேன்.

மிகச் சிறியதாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளுங்கள். பலருக்குக் கொடுக்கவேண்டும் என்றது மட்டுமே என் நோக்கம் (கண்டிப்பாக உதவி இயக்குநர்கள் மட்டுமே)" என்று பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுடைய கூகுள் பே எண்ணை அனுப்பவே, ஒரு கட்டத்தில் நிறுத்துவிட்டார். தனது ட்விட்டர் பதிவையும் நீக்கிவிட்டார்.

தனக்கு வந்திருந்த தொலைபேசி எண்கள் மூலமாகவும், தனக்குத் தெரிந்த உதவி இயக்குநர்கள் மூலம் மிகவும் கஷ்டப்படும் உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்து அவர்களுடைய கூகுள் பே எண்ணிற்கு பணம் அனுப்பி உதவி செய்துள்ளார்.

தன்னால் முடிந்த நபர்களுக்கு பணம் அனுப்பிவிட்டு கலை இயக்குநர் கிரண் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"உதவி இயக்குநர்களுக்கு வணக்கம். நான் உதவி செய்வதாகக் கூறியது, உறுப்பினர் ஆகாமல் பணிபுரிந்த தம்பிகளுக்கு என்று, காரணம் அவர்களுக்குப் படப்பிடிப்பு நடக்கும் சமயத்திலே சம்பளம் கிடைக்காது. இப்போது அவர்களுக்கு சங்கத்தின் மூலமாகவும் ஒன்று கிடைக்காது. அவர்கள் நிலை மிகவும் பரிதாபம் என நினைத்துதான் உதவி செய்ய முயன்றேன்..

ஆனால், அவர்களைக் காட்டிலும் அதிகமாக வந்தது உறுப்பினராக உள்ளவர்கள்தான். இருப்பினும் நான் நினைத்ததை விட அதிகமாக கோரிக்கைகள் வந்தன.

என்னால் இயன்ற அளவிற்கு நான் உதவித்தொகையை அனுப்பியுள்ளேன். என்னைச் சார்ந்தவர்களும் நிறையப் பேர் உள்ளதால், அவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பதால் உங்கள் அனைவருக்கும் உதவ முடியவில்லை. அதனால் தவறாக நினைக்கவேண்டாம். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்

நான் அளித்தது சிறிய தொகையே, ஆனாலும் பலர் எனக்கு நன்றி தெரிவிக்கும்போது, அவர்களின் அவசியத்தை என்னால் உணர முடிந்தது, தயவுசெய்து யாருக்காவது உதவும் எண்ணம் இருந்தால், மிகச் சிறு தொகையாக இருந்தாலும் யோசிக்காதீர்கள், இன்றைய நிலையில் 100 ரூபாய் கூட ஒருவருக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

முடியும் என நினைப்பவர்கள் உதவுங்கள். அதுபோலவே, உதவி பெற்றவர்கள் மறுபடியும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கும் வாங்கிக் கொடுங்கள். இந்தக் காலத்தை விரைவில் கடந்து செல்ல, ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்".

இவ்வாறு கிரண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x