

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இளைய மகள் ஷாஸா மொரானிக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து திரும்பிய ஷாஸா மொரானிக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் மும்பையின் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதேபோல ஷாஸாவின் மூத்த சகோதரியும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பினார். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் கரீம் மொரானியின் குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் கரீம் மொரானிக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பையிலுள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை ஸோவா மொரானி தற்போது கோவிட்-19 காய்ச்சலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதை ஸோவா மொரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்த ஸோவா மொரானி, ''என்னுடைய போராளிகளுக்கு குட் பை சொல்லவேண்டிய நேரம் இது. என்றென்றும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.