என்னைத் தெரியாததுபோல சிவகார்த்திகேயன் பேசியதில்தான் வருத்தம்: லட்சுமி ராமகிருஷ்ணன்

என்னைத் தெரியாததுபோல சிவகார்த்திகேயன் பேசியதில்தான் வருத்தம்: லட்சுமி ராமகிருஷ்ணன்
Updated on
1 min read

என்னைத் தெரியாததுபோல சிவகார்த்திகேயன் பேசியதில்தான் எனக்கு வருத்தம் என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் தங்களுடைய சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்து தங்களுடைய பொழுதைக் கழித்து வருகிறார்கள்.

இதில் நேற்று (ஏப்ரல் 12) காலை 'குறள் 786' என்று பெயரிடப்பட்ட ஒரு ட்ரெய்லரைப் பகிர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் "மேடம். இந்தக் குறும்படத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள். காத்திருக்கிறோம்" என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டார். அவர் பகிர்ந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், அபிநயா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதில் இயக்குநர் பெயராக லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணன், "இது ஒரு குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. அவரை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. நான் அதைக் கைவிட்ட பிறகுதான் அவர் 'மெரினா' படத்தில் நடித்தார். 'குறள் 786' படத்தில் அவருக்குச் சிறப்பான கதாபாத்திரம். ஆனால் அது இல்லாமலேயே வணிக ரீதியாகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுவிட்டார். கதாநாயகியாக அபிநயா நடிக்கவிருந்தார். அவரோடு பணிபுரிய விரும்பினேன். இன்ஷா அல்லாஹ், இன்னொரு தருணத்தில் 'குறள் 786' எடுக்கப்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட் பலராலும் பகிரப்பட்டது. மேலும் செய்தியாகவும் முன்னணி இணையதளங்கள் அனைத்திலுமே வெளியானது. இன்று (ஏப்ரல் 13) அந்தச் செய்தியைக் குறிப்பிட்டு லட்சுமி ராமகிருஷ்ணன், "சிவகார்த்திகேயன் உடனான வேறுபாடு எப்போதோ மறந்துவிட்டது. அவர் வெற்றிகரமாக இருப்பதில் மகிழ்ச்சி. அவர் இன்று இருக்கும் நிலைக்கு அவரது திறமைகள் மட்டுமே காரணம். என்னைத் தெரியாததுபோல அவர் பேசியதில்தான் எனக்கு வருத்தம். 'குறள் 786' படத்தின்போது அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் என்னுடன் பயணித்தார். என் குடும்ப உறுப்பினரைப் போன்றவர்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in