

உங்கள் எஜமானரின் குரலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக முதல்வருக்கு கமல் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. மேலும், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. நாளை (ஏப்ரல் 13) வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மாநிலங்கள் அளவில் பஞ்சாப், ஒரிசா, மகாஷ்டிரா, தெலங்கானா ஆகியவற்றில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போவதால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என குரல்கள் வலுத்து வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்புத் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தன்னிச்சையாக முடிவெடுத்தபின் நீங்கள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனது மாண்புமிகு முதல்வரே? உங்கள் எஜமானரின் குரலுக்காகவா?
எனது குரல் மக்களினுடையது, அவர்களிடமிருந்து வருவது. உங்கள் நாற்காலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்கையில் விழித்திடுங்கள் முதல்வர் அவர்களே"
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.