

சிறையில் கரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது புதிதாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிரான புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு பெவர்லி ஹில்ஸ் ஹோட்டல் அறையில் நடந்த பாலியல் சீண்டலையொட்டி இந்தப் புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வைன்ஸ்டீன் பிப்ரவரி 2013-ல் நடந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். முன்னதாக அவர் செய்த பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு அவருக்கு 23 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் நியூயார்க் சிறையில் உள்ளார். சமீபத்தில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண், மே 11, 2010 அன்று, ஹோட்டலில் வைன்ஸ்டீன், தன் விருப்பத்தை மீறி தன்னைக் கட்டி வைத்து பாலியல் ரீதியாகச் சீண்டியதாகக் கூறியுள்ளார். இந்தப் பெண் கடந்த வருடம் அக்டோபர் மாதமே டிடெக்டிவ்களால் விசாரணை செய்யப்பட்டார்.
இந்தப் புதிய குற்றச்சாட்டு நிரூபணமானால் மேற்கொண்டு இன்னமும் 4 வருடங்கள் சிறைத் தண்டனையை வைன்ஸ்டீன் பெறக்கூடும். அதாவது அதிகபட்ச சிறைத் தண்டனையான 29 வருடங்களை அவர் சிறையில் கழிக்க வேண்டும். இன்னும் இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி சொல்ல முன் வராததால் அவை வழக்குகளாகப் பதிவு செய்யப்படவில்லை.