

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா முழுக்க கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் கரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மட்டுமன்றி, சமைப்பது, யோகா செய்வது, நண்பர்களுடன் வீடியோ காலில் பேசுவது எனத் தொடர்ச்சியாக தங்களுடைய பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
கரோனா ஊரடங்கு சமயத்தில் வந்த உகாதி பண்டிகையின்போதுதான் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ட்விட்டர் தளத்தில் இணைந்தார். தொடர்ச்சியாக ட்விட்டர் தளத்தில் அவரது செயல்பாடுகள் பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
கரோனா பாதிப்புக்கு நிதியுதவி அளிக்கும் அனைத்து நடிகர்களையும் பாராட்டி வருவது மட்டுமன்றி, தனது பழைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும், இந்தத் தருணத்தில் தனது சுயசரிதையை எழுதி வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சிரஞ்சீவி, "கரோனா ஊரடங்கால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன். நிறையப் படங்களும் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து எழுத இந்த நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனது சுயசரிதையை ஒலி வடிவிலும், புத்தக வடிவிலும் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.