Published : 10 Apr 2020 08:03 PM
Last Updated : 10 Apr 2020 08:03 PM

நலவாரியத்தின் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1000: தமிழக அரசு ஆணை

திரைப்பட நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்கள் ஆகியோருக்கும் உதவிகள் வழங்க நிதியுதவி மற்றும் பொருளுதவி பெறப்பட்டு வருகிறது. இதனிடையே, திரைப்பட நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1000 ரூபாய் அளிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

இதனை எப்படிப் பெறுவது என்று பலரும் தவித்து வந்த நிலையில், நடிகர் சங்கத்தின் செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அதன் விவரம் இடம்பெற்றுள்ளது.

நடிகர் சங்கத்தின் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

"தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு 1000 ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன் அடிப்படையில் நடிகர் சங்க உறுப்பினர்கள் (திரைப்பட நல வாரியத்தின் உறுப்பினர்கள் மட்டும்) கீழ்க்காணும் ஆவணங்களை 10.4.2020, 11.4.2020 ஆகிய இரு தினங்களுக்குள் nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மின்னஞ்சலில் அனுப்ப இயலாதவர்கள் 98656 03660, 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கும் போட்டோ நகல் எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தேவையான ஆவணங்கள்

* திரைப்பட நலவாரியப் புத்தகத்தின் முதல் பக்கம்

* வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் (அல்லது) காசோலை

* நடிகர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை".

இவ்வாறு நடிகர் சங்கத்தின் செயலர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x