Published : 09 Apr 2020 10:59 AM
Last Updated : 09 Apr 2020 10:59 AM

சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்: நாட்டுப்புறப் பாடலாசிரியருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய ராப் பாடகர்

பாலிவுட்டின் பிரபல ராப் பாடகர் பாத்ஷா. கடந்த மார்ச் மாதம் இவரது இசையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் ‘கேந்தா பூல்’. சோனி மியூசிக் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் பாடல் யூடியூபில் இன்று வரை 14 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.

இப்பாடல் வெளியானதும் ரசிகர்கள் பலர் இந்தப் பாடல் பெங்காலி நாட்டுப்புறப் பாடலாசிரியர் ரத்தன் கஹர் எழுதிய பாடல். ஆனால், அவருடைய பெயரை பாத்ஷா எங்குமே குறிப்பிடவில்லை என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பாத்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்க்த்தில் ரத்தன் கஹர் எழுதிய பாடலை நான் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அவரைப் பற்றி குறிப்புகளை நான் எங்குமே பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

மேலும் ரத்தன் கஹர் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுகிறார் என்று அறிகிறேன். யாராவது அவரைத் தொடர்புகொள்ள முயன்றால் அவருக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரத்தன் கஹர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பதாக பாத்ஷாவுக்குத் தகவல் கிடைத்தது. தனது உதவியாளர்கள் மூலம் உடனடியாக அவரைத் தொடர்புகொண்ட பாத்ஷா, ரத்தனுக்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ரத்தன் கஹர் கூறியிருப்பதாவது:

''என்னுடைய வங்கிக் கணக்குக்கு பாத்ஷா மூலம் 5 லட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதை எனது மகன் உறுதி செய்தார். ஆனால், பணம் மட்டுமே முக்கியம் இல்லை. அவருடைய ‘கேந்தா பூல்’ பாடலில் உள்ள ‘பரோ லோகெர் பேட்டி லோ’ என்ற வரிகளை எழுதிய பாடலாசிரியர் என்று அவர் என்னை அடையாளப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி''.

இவ்வாறு ரத்தன் கஹர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x