

இந்தத் தருணத்தில் ஒவ்வொரு கலைஞனும் உதவி செய்ய வேண்டியது கடமை என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்தக் காரணத்தால் தினசரித் தொழிலாளர்கள் பலரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டைகளாகவும் உதவி செய்துள்ளனர். தற்போது இந்த உதவிகள் தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இந்தச் சந்திப்பில் தமிழக அரசுக்கும் நடிகர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பாக இந்தச் சந்திப்பில் அவர் கூறியதாவது:
"பெப்சிக்கு கொடுப்பதைத் தாய் வீட்டுக்குக் கொடுக்கும் சீதனமாகத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் அனைவரும் நன்கொடை கொடுக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறோம். கார்கில் போர், குஜராத் பூகம்பம் ஆகியவற்றின்போது அந்தப் பகுதிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் ஒவ்வொரு கலைஞனும் உதவி செய்ய வேண்டியது கடமை. நாங்களே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருந்தாலும் கூட, உறுப்பினர்கள் சந்தா தொகையிலிருந்து 10 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுக்கவுள்ளோம். அதேபோல் பெப்சி தொழிலாளர்கள் அனைவரும் 1 ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்றார்கள். ஆகவே, மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் நிவாரண நிதிக்குக் கொடுக்கவுள்ளோம்.
அதேபோல் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது தமிழக அரசு. அதில் திரைப்படத் தொழிலாளர்கள் விடுபட்டுப் போயுள்ளனர். அதில் எங்களையும் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். இது தொடர்பாகக் கடிதமும் கொடுத்துள்ளோம்".
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.