Published : 07 Apr 2020 01:46 PM
Last Updated : 07 Apr 2020 01:46 PM

8 கொள்ளையர்கள்... ஒரு தலைவன்... டாலி மாஸ்க் - மனதை வென்ற ‘மனி ஹெய்ஸ்ட்’

(ஸ்பாய்லர்கள் கொண்ட கட்டுரை என்பதால் இதுவரை ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடர் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்ளவும்)

ஒரு வங்கி.... 8 கொள்ளையர்கள்.... அவர்களுக்கு ஒரு தலைவன்.

இதுதான் ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் கதைக்களம். வங்கிக் கொள்ளை, கொள்ளையர்கள், அவர்களை இயக்கும் ஒரு ஆள். இவற்றை அடித்தளமாக வைத்து உலகம் முழுவதும் எண்ணற்ற படங்கள் வந்துவிட்டாலும் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுகிறது ‘மனி ஹெய்ஸ்ட்'.

அலெக்ஸ் பினா என்பவரின் கற்பனையில் உதித்த ‘மனி ஹெய்ஸ்ட்’ ஆண்டெனா 3 என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் ’லா காஸா டி பாபெல்’ என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒளிபரப்பானது. மொத்தம் 15 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரின் உரிமையை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் 22 எபிசோட்களாகப் பிரித்து உலகமெங்கும் வெளியிட்டது. வெளியான 2017 ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டது ‘மனி ஹெய்ஸ்ட்’.

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் 8 கொள்ளையர்களையும் அவர்களை வழிநடத்தும் ‘ப்ரொஃபஸர்’ என்ற ஒருவரையும் சுற்றி நடக்கும் கதை.

டோக்யோ என்ற பெண்ணின் பார்வையில் நமக்குக் கதை சொல்லப்படுகிறது. சிறு சிறு திருட்டில் ஈடுபடும் அவளை போலீஸிடமிருந்து ஒருவர் காப்பாற்றுகிறார். இப்படித்தான் முதன்முதலில் நமக்கு ப்ரொஃபஸர் அறிமுகமாகிறார். இதேபோல 8 திருடர்களைத் தேர்ந்தெடுக்கிறார் ப்ரொஃபஸர். யாருடைய கதாபாத்திரத்தின் பெயரும் நமக்கு ஆரம்பத்தில் சொல்லப்படுவதில்லை. டோக்யோ, நைரோபி, டென்வர், ரியோ, மாஸ்கோ, ஓஸ்லோ என்று நகரங்களின் பெயரை கொள்ளையர்களுக்குச் சூட்டுகிறார் ப்ரொஃபஸர். பாதுகாப்புக் காரணங்களுக்காக யாருடைய தனிப்பட்ட தகவல்களும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஒரு கட்டுப்பாட்டை விதிக்கிறார்.

தன்னையும் ப்ரொஃபஸர் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ஒரு மூக்குக் கண்ணாடி, ஷேவ் செய்யப்படாத ஒரு மாத தாடி, யாரையும் அதிர்ந்து கூட பேசாத குரல். இதுதான் ப்ரொஃபஸர். தன் தந்தையின் நிறைவேறாத ஆசையான ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயின் வங்கியைக் கொள்ளையடிப்பதை நிறைவேற்றுவதற்காகத்தான் 8 பேரையும் ஒன்றிணைத்ததாகச் சொல்கிறார்.

பிரபல ஸ்பானிய ஓவியரான சல்வடோர் டாலியின் முகத்தை முகமூடியாக அணிந்து வங்கிக்குள் நுழைகின்றனர். உள்ளே நுழைந்தபிறகுதான் தெரிகிறது. அது வெறும் வங்கி மட்டுமல்ல. அங்குதான் பணமும் அச்சடிக்கப்படுகிறது என்று. அங்கிருந்து தப்பிக்கும் முன் 2.4 பில்லியன் யூரோக்களை அச்சடித்து முடிக்க வேண்டும் என்பது ப்ரொஃபஸரின் திட்டம். 8 பேரும் வங்கியின் உள்ளே இருக்க வெளியே ஒரு மர்ம இடத்திலிருந்த் அவர்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார் ப்ரொஃபஸர். கொள்ளைக்கு முன்பு 5 மாத காலம் அவர்களை ஒரு பெரிய பங்களாவில் தங்க வைத்துப் பயிற்சியளிக்கிறார். இந்தப் பயிற்சி குறித்த காட்சிகள் வங்கியில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னணியில் சொல்லப்படுகிறது.

ஸ்பாய்லர்ஸ்

அந்த 8 கொள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் உறவுச் சிக்கல், ரியோ-டோக்யோ இடையேயான காதல், நைரோபியின் பின்புலம், பெர்லின் யார்? ப்ரொஃபஸரோடு சேர்ந்து இவர்கள் அனைவரையும் பிடிக்க துடியாய் துடிக்கும் போலீஸ் அதிகாரி ரக்கேல். அவருடைய குடும்பப் பின்னணி. இதைச் சுற்றியே நிகழ்கிறது ‘மனி ஹெய்ஸ்ட்’ சீசன் 1.

முதல் சீசனின் தொடர்ச்சியே இரண்டாவது சீசன். வங்கி அதிகாரியாக இருக்கும் மோனிகாவுக்கு டென்வர் மீது ஏற்படும் காதல், டென்வெர் தந்தை இறப்பது, போலீஸ் அதிகாரி ரக்கேலுக்கும் ப்ரொஃபஸருக்கும் இடையே மலரும் காதல், இறுதியில் வங்கியின் கீழ் சுரங்கம் தோண்டி வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிக்கும் கொள்ளையர்களோடு ரக்கேலும் இணைந்து கொள்வதோடு முடிகிறது சீசன் 2.

ராயல் மின்ட் கொள்ளை சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது சீசன் 3. ஒவ்வொரு கொள்ளையரும் தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நாட்டில் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். ரியோவுடன் தன் வாழ்க்கையைக் கழித்து வரும் டோக்யோ அங்கிருந்து வெளியேற விரும்புகிறாள். டோக்யோவின் இந்த திடீர் முடிவு ரியோவை நிலைகுலையச் செய்கிறது. ரியோ செய்யும் ஒரு முட்டாள்தனமான செயல் அந்தத் தீவுக்கு இன்டர்போல் போலீஸை வரவைக்கிறது. ரியோவைப் பிடிக்கிறது போலீஸ். ரியோவை மீட்க இன்னொரு கொள்ளைச் சம்பவத்துக்குத் தயாராகின்றனர் ப்ரொஃபஸரும் மீதமுள்ள கொள்ளையர்களும். இவர்களோடு லிஸ்பன் என்ற பெயரில் இணைந்து கொள்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி ரக்கேல். இந்த முறை இவர்கள் கொள்ளையடிக்க முடிவு செய்திருப்பது தங்கக்கட்டிகளை.

இன்னொரு வங்கியில் உள்ள பணயக்கைதிகளை வைத்து ரியோவை விடுவிக்க வைக்கிறார் ப்ரொஃபஸர். இடைப்பட்ட காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே ப்ரொஃபஸரும், கொள்ளையர்களும், அந்த டாலி முகமூடியும் ஹீரோவாக ஆகின்றனர். கொள்ளையர்களுக்கு ஆதரவாக வங்கியின் முன்பு மக்கள் கூட்டம் குவிந்து கோஷங்களை எழுப்புகின்றனர். இந்த முறை கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி அலிசியா சியாரா. நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் அவர் கொள்ளையர்களைப் பிடிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்.

முந்தைய சீசனின் காதல் பறவைகளாக இருந்தவர்கள் இந்த சீசனில் எதிரும் புதிருமாக மாறுகிறார்கள். ரியோ - டோக்யொ, மோனிகா - டென்வர், ப்ரொஃபஸர் - ரக்கேல் என அனைவருக்குள்ளும் ஈகோ தலைக்கேறி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதனிடையே கொள்ளைக் கூட்டத்தில் புதிதாக இணைந்த பலெர்மோ, மர்சேய்ல் போலீஸால் சுடப்பட்டு உயிருக்குப் போராடும் நைரோபி, போலிஸிடம் மாட்டிக் கொள்ளும் ரக்கேல் என்று விறுவிறுப்புடன் முடிகிறது சீசன் 3.

நைரோபியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சக கொள்ளையர்கள் போராடுவதில் தொடங்குகிறது சீசன் 4. மர்சேய்ல் உதவியுடன் ரக்கேல் உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறார் ப்ரொஃபஸர். வங்கி கவர்னரின் பாதுகாவலனாக இருக்கும் கான்டியா கொள்ளையர்கள் பிடியில் இருந்து தப்பித்து ஒவ்வொருவராக தாக்குவதில் இருந்து ஜெட் வேகத்தில் பறக்கிறது கதை. இறுதியில் போலீஸால் சுடப்பட்ட நைரோபி பிழைத்தாரா? ரக்கேல் என்னவானார்? கொள்ளையர்களால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா என்பதே சீசன் 4.

சலிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் என்று வழக்கமான கொள்ளைப் படங்களில் இருந்து மாறுபட்டு கதாபாத்திரங்களின் பின்னணியை நுணுக்கமாகவும், அவர்களுக்கு இடையிலான உறவுச் சிக்கல்களை ஆழமாகவும் பேசுகிறது ‘மனி ஹெய்ஸ்ட்’. இத்தொடரின் வெற்றிக்கு ப்ரொஃபஸர் கதாபாத்திர வடிவமைப்பு மிக முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் டெம்ப்ளேட் அசகாய சூரன் அல்ல அவர். ஒரு கொள்ளையனுக்கு உள்ள எந்தவித அடையாளமும் அவரிடம் கிடையாது. வகுப்பறைகளில் முதல் பெஞ்ச் மாணவர் என்று நாம் கிண்டலடிப்போமே அதே போன்ற தோற்றம் கொண்டவர். அடித்தால் கூட திருப்பி அடிக்கத் தெரியாது. ஆனால் சூழ்நிலைகளின் ஆழத்தை அறிந்து பிரச்சினைகளை சமாளிப்பதில் வல்லவர். அதனாலேயே கொள்ளையர்கள் கண்ணை மூடிக் கொண்டு ப்ரொஃபஸர் சொல்வதைக் கேட்பதை நம்மால் எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

ஆனால் மிகவும் புத்திசாலித்தனமான கதாபாத்திரமாக காட்டப்படும் ப்ரொஃபஸரிடமே பல சறுக்கல்கள் ஏற்படுகின்றன. சில விஷயங்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று அவர் பிறரை எச்சரிக்கும் விஷயங்களில் பின்னால் அவரே மாட்டிக் கொள்கிறார். உதாரணமாக ரக்கேலுடனான காதல். இதனால் அவர் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகின்றன.

கொள்ளையர்களில் யாரும் நல்லவர்களும் இல்லை. கெட்டவர்களும் இல்லை. அனைவருமே சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்கின்றனர். ப்ரொஃபஸரே கூட தான் தப்பிப்பதற்காக ஒரு காட்சியில் ரக்கேலின் அம்மாவையே கொல்லத் துணிகிறார். ஆரம்பத்தில் பார்வையாளர்களால் அதிகம் வெறுக்கப்படுவது போல சித்தரிக்கப்பட்ட பெர்லின் கதாபாத்திரம் சீசன்-1 முடியும் தருவாயில் பார்வையாளர்கள் அதிகம் விரும்பும் கதாபாத்திரமாக மாறிப்போவார். தொடரில் வில்லன் என்று யாருமே கிடையாது. பொருளாதார அமைப்பே மிகப்பெரிய வில்லன் என்பது போலவே வசனங்களும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். கதாபாத்திரங்களை சூழ்நிலைகளை வைத்து பார்வையாளர்களே யார் வில்லன் யார் ஹீரோ என்று முடிவு செய்து கொள்ளவேண்டும்.

இத்தொடரை ஆண்டெனா 3 சேனலிடமிருந்து நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றிய பிறகு உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்த்த வெப் சீரிஸ்களில் ஒன்றாக ‘மனி ஹெய்ஸ்ட்’ மாறிப்போனது. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் உலகளாவிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதே நேரத்தில் இத்தொடருக்கு எதிராக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன. உலகம் முழுக்க நடந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் சிவப்பு உடையும் டாலி மாஸ்க்கும் அணிந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த லலிதா ஜூவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரைப் பின்பற்றியே கொள்ளையடித்தோம் என்று போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்தது உதாரணம்.

எது எப்படியோ.. இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் நமக்கு நல்ல பொழுதுபோக்காக சரியான சமயத்தில் வெளியாகியுள்ளது ‘மனி ஹெய்ஸ்ட்’ சீசன் 4. வெளியான அன்றே அனைத்து எபிசோட்களைப் பார்த்து முடித்துவிட்டு இப்போதே அடுத்த சீசன் எப்போது என்று புலம்பத் தொடங்கிவிட்டனர் ‘ப்ரொஃபஸர்’ ரசிகர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x