Published : 05 Apr 2020 06:22 PM
Last Updated : 05 Apr 2020 06:22 PM

இத்தாலி நாட்டின் நிலைமை நமக்கு வேண்டுமா? - மீனா கேள்வி

இத்தாலி நாட்டின் நிலைமை நமக்கு வேண்டுமா என்று பேசியுள்ள விழிப்புணர்வு வீடியோவில் மீனா கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பேசி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது மீனாவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் பேசியிருப்பதாவது:

"அனைவருக்கும் வணக்கம். இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் லாக் டவுன் செய்திருக்கிறது. ஆனால், நிறையப் பேர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படும் போதும், தொலைக்காட்சியில் பார்க்கும் போதும் வேதனையாக இருக்கிறது.

இந்த மாதிரி அரசாங்கம் சொல்வதைக் கேட்காததால் மட்டுமே இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் எல்லாம் இப்போது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போகிறார்கள். அமெரிக்காவில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த கோவிட் 19 வைரஸ் தொற்று இருக்கிறது.

இந்த நிலைமை நமக்கு வேண்டுமா? இந்த நிலை நமக்கு வராமல் இருப்பதற்கு அரசாங்கம் சொல்வதைக் கேட்க வேண்டும். எவ்வளவு நேரம் வீட்டில் உட்காருவது, டிவி பார்ப்பது, போரடிக்கிறது என்று சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுங்கள். குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள், வீட்டு வேலைகள் பாருங்கள். சமைக்க உதவி செய்யுங்கள். யோகா உள்ளிட்ட பல விஷயங்கள் பொழுதுபோக்குவதற்கு உள்ளது.

வீட்டிற்குள்ளேயே உட்கார்ந்தது இந்த உலகத்தையே காப்பாற்றும் வாய்ப்பு அடிக்கடி அனைவருக்கும் கிடைக்காது. காமெடி எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால் தான் உங்கள் குடும்பம் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆகையால் வீட்டில் அனைவரும் பத்திரமாக, ஆரோக்கியமாக இருங்கள்”

இவ்வாறு மீனா பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருப்பதால், 3 மொழிகளிலுமே விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார் மீனா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x