Published : 03 Apr 2020 01:35 PM
Last Updated : 03 Apr 2020 01:35 PM

பாடகர் ஹரிஹரன் பிறந்த நாள்: ஆலாபனைகளைப் பிரசவிக்கும் மெஷின் 

திருமணமான பெண் தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு புகுந்த வீட்டைச் சொந்தமாக்குவதைப் போல ஒரு பாடல் வெளிவந்து விட்ட பிறகு அதை உருவாக்கிய இசையமைப்பாளரையும் பாடலாசிரியரையும் விட்டு விட்டு அதைப் பாடிய பாடகரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றது என்று சொன்னால் மிகையாகி விடாது. எங்கோ ஒலித்துக் கிடக்கும் ஸ்பீக்கரின் காந்த சுருள்களைக் கடந்து வரும் ஒரு குரல் காற்றில் கலந்து நம் காதுகளை வந்து தஞ்சமடையும்போது வழிந்த குரலின் சோகமோ ஏமாற்றமோ வலியோ வேதனையோ நம் காதுகளைக் கடந்து எண்ணங்களைச் சிதறடித்து ஆழத்தில் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின் துடிப்பை ஏற்றவோ இறக்கவோ செய்கின்றது என்றால் அது பிரபல பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் குரலாய் தான் இருக்கும்.

1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானார். ஆனால் தான் அறிமுகமான அதே படத்தில் 'தமிழா தமிழா' என்ற பாடலின் மூலமாக இந்த ஆலாபனைகளைப் பிரசவிக்கும் மெஷினான ஹரிஹரனையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார் இசைப்புயல். ஹரிஹரன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த வருடத்தோடு கிட்டதட்ட 28 வருடங்களாகிவிட்டன. இந்த ஏப்ரல் 3-ம் தேதியிலிருந்து அவர் 65 வயதை எட்டுகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

28 வருடங்களுக்கு முன்னால் 'ரோஜா' படத்தில் கேட்ட அதே குரல் பல வருடங்கள் பல பாடல்கள் பல மொழி என அத்தனையும் தாண்டி இன்னமும் அந்தக் குரல் அதன் தனித் தன்மையையும் வசீகரமும் ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல ப்ரஷ்ஷாக இருக்கிறது என்றால் அதுதான் ஹரிஹரன் குரல்.. அவரின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு அசைபோடல் தான் இந்தக் கட்டுரை.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் 03.04.1955 அன்று பிறந்தவர் ஹரிஹரன். அது அவரது அப்பா எச்.ஏ.எஸ்.மணியின் சொந்த ஊர். திருவிதாங்கூர் இசைக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளிவந்த அவர் பம்பாய்க்கு இடம் பெயர்ந்து அங்குத் தென்னிந்திய இசைப் பள்ளியை நடத்தி வந்தார். ஓர் இசை ஆசிரியராக அங்கு பம்பாய் சகோதரிகள் (Bombay sisters) போன்ற புகழ்பெற்ற சகோதரிகளையும் உருவாக்கினார். பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிப் படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார். கசல் எனும் இந்துஸ்தானி பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சி பெற்ற இவர், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். லெஸ்லி லூயிசும் ஹரிஹரனும் சேர்ந்து நடத்தும் இந்தக் குழு பல தனி பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. 2009-ல் 'மோதி விளையாடு' என்ற தமிழ்ப்படத்திற்குப் பின்னணி இசையும் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2000ங்களில் பிறந்தவர்கள் கொண்டாட இன்றைக்கு எப்படி சித் ஸ்ரீராம் இருக்கிறாரோ அப்படிதான் 90களில் பிறந்தவர்களுக்கு ஹரிஹரன். எங்கள் காலத்தில் ஹீரோக்களுக்கு ஏற்ப தன் குரலை ஏற்றி இறக்கிப் பாடும் எஸ்.பி.பி யும் இருந்தார். இசைக்கு ஏற்ப தன் உடலைப் பம்பரமாகச் சுழற்றவும் பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடவும் செய்யும் ஹரியும் இருந்தார்.

"ஒரு கர்லிங் ஹேர் ,கையில் ஒரு காப்பு, விதவிதமான ப்ரேம் கொண்ட கண்ணாடி, கழுத்தில் ஒரு கால் கிலோ அளவுக்கு ஆபரணம், இரண்டு பாடல்களுக்கு ஒரு முறை கோட் மாற்றுவது சகலமும் ஒரு பாடகரிடம் கண்டீர்கள் என்றால் சந்தேகமேயில்லை அவர்தான் ஹரிஹரன்.

பொதுவாகத் தமிழ் சினிமாவின் காலத்தை இது எம்ஜிஆர் - சிவாஜி காலம், ரஜினி - கமல் காலம், அஜித் - விஜய்யின் காலம் என நடிகர்களை வைத்தே குறிப்பிட்டுப் பிரித்து விடலாம். அதே போல் இசையமைப்பாளர்களையும் பிரித்து விடலாம் எப்படி என்கிறீர்களா? எம்ஜிஆர் - சிவாஜி காலத்தை எம்.எஸ்.வியும் ,ரஜினி - கமல் காலத்தை இளையராஜாவும் தேவாவும் பிரித்துக் கொண்டார்கள். ஆனால் அஜித் மற்றும் விஜய்யின் காலத்தினை ஓர் இசையமைப்பாளரைக் கொண்டு பிரிப்பது என்பது இயலாத காரியம் ஏன் என்றால் இவர் இருவர் காலத்திலும் ஒரு மரத்தில் நிறையக் கிளைகள் முளைப்பது மாதிரி நிறைய இசையமைப்பாளர்கள் முளைத்து விட்டார்கள் தமிழ் சினிமாவில். அதனால் அவர்களின் காலத்தை பாடகர் ஹரிஹரன் கொண்டு பிரித்து விடலாம். அஜித்கும் விஜய்க்கும் காதல் வந்தாலோ காதலை முறித்துக் கொண்டு நின்றாலோ அதைக் கொண்டாட வந்ததும் ஹரிஹரன் தான். அதைப் பெரும்பாலும் கொட்டித் தீர்த்ததும் இந்த சாக்லேட் குரல்தான்.

ஹரிஹரனை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது என்னவோ இசைப்புயல்தான் என்றாலும் ஹரியை பெரும்பாலும் பயன்படுத்தி வந்தது தேனிசைத் தென்றல் தேவாவே. இரண்டு படங்களுக்கு ஒரு முறை என ஹரிக்குத் தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்து வந்திருக்கிறார். ஹரியின் சிறந்த பாடல் என்று பட்டியலிட்டால் அதில் குறைந்தது இரண்டு பாடல் தேவாவின் இசையில் வந்ததாக இருக்கும் என்பது நிதர்சன உண்மை. இதை விடத் தேவாவின் இசையில் ஐந்து பாடல்களைக் கொண்டு உருவான 'உன்னைத் தேடி’ என்ற படத்தில் நான்கு பாடல்களை ஹரிக்கே கொடுத்திருப்பார். அதை உணர்ந்த ஹரியும் தன் பங்கினை கச்சிதமாகச் செய்திருப்பார்.

80 மற்றும் 90களில் இளையராஜாவிடம் ஹரி பாட வாய்ப்பு கேட்டதாகவும், ஏதோ தவிர்க்க இயலாத காரணத்தினால் வாய்ப்பு தர முடியாமல் போனதாக இளையராஜா ஏதோ ஒரு பேட்டியில் அவரே கூறியிருப்பார். பிறகு அதற்கு பிராய்ச்சிதமாக 'காசி' என்ற படத்தில் அனைத்துப் பாடல்களையும் ஹரியையே பாட வைத்து அசத்தியிருப்பார் இசைஞானி.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் ஹரியைப் பயன்படுத்தாமல் வெளிவரும் படங்களில் தன் மனத்தில் சிறந்த ஆல்பமாகக் கருதுவதில் எல்லாம் ஹரிக்கு ஒரு சின்ன போர்ஷனையாவது கொடுத்து பின்னணியில் பயன்படுத்தியிருப்பார். உதாரணத்திற்கு 'காதலர் தினம்' படத்தில் எந்தப் பாடலையும் ஹரி பாடியிருக்க மாட்டார். ஆனால் 'ரோஜா ரோஜா' என்ற பாடலின் சோக ராகத்தினையும் 'காதலன்' படத்திலும் இது போல ஒரு போர்ஷனையும் பாடியிருப்பார். இவர்கள் இருவரும் இணையும்போது ஒரு பாடல் ஆனது உடலை விட்டு உயிரைப் பிரிக்கவும் செய்யும் சேர்க்கவும் செய்யும். அது பாடலின் தன்மையைப் பொறுத்து அமையும்.

மேலும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் 'ரட்சகன்' படத்தில் வரும் "சந்திரனைத் தொட்டது யார்? " என்ற பாடலை எழுதும்போது இருவருக்கும் பெரும் சண்டையே வந்ததாம். காரணம் அந்தப் பாடலில் "நீல் ஆம்ஸ்ட்ராங்" என்ற அமெரிக்க விண்வெளி வீரரின் பெயரை வைரமுத்து எழுதினாராம். ஆனால், அந்தப் பெயர் மெட்டுடன் ரஹ்மானுக்குப் பொருத்தம் ஆகவில்லையாம். எனவே அதை நீக்கி வேறொன்றைச் சேர்க்குமாறு ரகுமான் கூறினாராம். ஆனால் வைரமுத்துவோ முடியாது எனப் பிடிவாதமாக இருந்து, பாடலை யார் பாடப்போவது என்று கேட்க, அதற்கு ஹரி என ரகுமான் கூற, சரி ஹரி வந்து அதை அந்த வார்த்தையோடே பாடட்டும். அவரால் முடியவில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். அதற்குப் பின்னர் நடந்தது எல்லாம் நாம் அறிந்ததே ஆம்ஸ்ட்ராங் என்ற கடின வார்த்தை ஹரியின் மெல்லிய குரலில் போய் மெலடி வார்த்தையாகி வந்ததை.

பெரும்பாலும் ஹரி பாடும் பாடல்களில் ஒரு சின்ன ஏற்ற இறக்கம் ஒரு குட்டி ஆலாபனைகள் எல்லாம் இல்லாத பாடல்கள் சற்று குறைவு என்றே சொல்லத் தோன்றுகின்றது

ஹரிஹரனின் குரலில் என் டாப் 6 ப்ளேலிஸ்ட்

1.'பம்பாய்' - உயிரே உயிரே

பம்பாய் படத்தில் ஒரு காட்சி வரும். அரவிந்த்சாமி மனிஷா கொய்ராலாவுக்காக காத்திருப்பது போல அப்போது உயிரே உயிரே பாடல் ஒளிபரப்பாகும் அந்தக் காதலனின் ஏக்கத்தைக் காதலின் வலியை ஹரிஹரன் என்றோர் மனிதன் எப்படிக் கடத்தியிருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது அன்றைய காதலர்களின் காதல் கீதம் என்றால் மிகையாகாது.

2. 'ஜீன்ஸ்' - அன்பே அன்பே கொல்லாதே

அண்ணனும் தம்பியும் ஒரே பெண்ணைக் காதலிப்பார்கள். அண்ணனோ அவள் காதலியைக் கண்டங்கள் தாண்டி காதலிப்பார் தம்பியோ தன் காதலி சற்று கிராமிய கலாச்சாரத்தை விரும்புவதை அறிந்து தனக்குரிய கற்பனையில் மிதக்க அப்போது ஒளிபரப்பாகும் இந்தப் பாடலில் ஒரு நீண்ட ஆலாபனை ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியிருப்பார். அதனை ஹரி மற்றும் அனுராதாவைத் தாண்டி வேறு யார் பாடியிருந்தாலும் அது அப்படி இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

3.'தீனா'- சொல்லாமல் தொட்டுச் செல்லும்

தல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்? இன்றைக்கும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் இந்தப் பாடலுக்கு இடம் இல்லாமல் இல்லை.

4.'ரன்' - பொய் சொல்லக் கூடாது காதலி

இந்தப் பாடலில் வரும் ஹை பிட்ச் லோ பிட்ச் என எல்லா பிட்ச்களிலும் ஹரி சதமடித்திருப்பார் இந்தப் பாடலில் ஹரியும் புல்லாங்குழல் ஓசையும் போட்டி போடுவது போல இசையமைத்திருப்பார் வித்யாசாகர்.

5.'வேட்டையாடு விளையாடு' - மஞ்சள் வெய்யில்

வழக்கமான ஒரு மஞ்சள் மாலை வேளையில் கமலும் ஜோதிகாவும் டின்னருக்குச் செல்வார்கள். அவர்கள் போகும் இடமெல்லாம் சுற்றிச் சுற்றி படமாக்கி நியூயார்க் நகரத்தின் அழகியலை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். ஒரு முன்னேறிய நாட்டின் அழகைக் காட்டப் போகும் பாடல் என்பதால் இதுவரை எங்கும் கேட்டிடாத வகையில் தன் இசையினை ஒரு ஸ்டைலிஷ் ஆக வடிவமைத்திருப்பார் ஹாரிஸ். அந்தப் பாடலின் தன்மை சூழ்நிலை ஆகியவற்றை அறிந்த ஹரியும் க்ரிஷ்மும் நம்மை நியூயார்க்கிற்கே கொண்டு போயிருப்பார்கள் தங்கள் குரல்களின் வழியாக.

6.'ஜோடி'- ஒரு பொய்யாவது சொல் கண்ணே

மின் கம்பத்தின் மீது மாட்டிக்கொண்ட ஒரு காற்றாடி காற்றடிக்கும் போதேல்லாம் அது அசையும். அது போலத்தான் இந்தப் பாட்டு மியூசிக் ப்ளேயரில் இருந்து இழைகின்ற போதேல்லாம் ஒரு கனமான ஒரு தருணத்தைக் கடப்பது போலவே தோன்றும். அதில் அந்த அளவுக்கு ஹரி உருகிப் பாடி நம்மையும் உருக்கியிருப்பார்.

வித்யாசாகர், பரத்வாஜ், யுவன், S.A.ராஜ்குமார் ,ஹாரிஸ் ஜெயராஜ் என பல ஜாம்பவான்களும் தென்னிந்தியாவில் ஹரியின் சிறகு விரிய உறுதுணையாய் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது

இப்போதெல்லாம் ஹரிஹரன் சினிமாவில் பாடல்களைப் பாடுவதை விட ரசிகர்களிடையே நேரடியாகப் பாடுவதைத் தான் விரும்புகிறாராம். அதனால் பல நாடு பல கண்டங்களுக்குப் பறந்து கொண்டேயிருக்கிறது இந்தப் பாடும் பறவை. நீண்ட நாட்களுக்குப் பிறகு 'தெறி' படத்தில் விஜய்க்கு "உன்னாலே என் ஜீவன்" பாடலைப் பாடியிருப்பார். ஆடியோவாக வெளியானது அந்தப் பாடல். ஆனால் படத்தில் ஜி.வி பாடியது இடம்பெற்றிருக்கும். ஆனாலும் அதை ரசிகர்கள் கொண்டாடினர்.

இதே போல தல அஜித்திற்கு 'விஸ்வாசம்' படத்தில் "வானே வானே" பாடலைப் பாடியிருப்பார். தமிழ்நாட்டில் அந்தப் பாடல் புகாத காது கிடையாது, ஒலிக்காத வீடு கிடையாது என்றே கூறலாம். இந்த இரண்டு பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை ஒன்று உண்டு. இரண்டு பாடலுமே காதல், கல்யாணம், முதலிரவு, குழந்தை என ஒரு வாழ்வியலைக் கடத்தும் பாடலாகவே அமைந்திருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. எத்தனையோ பாடகர்கள் அஜித், விஜய்க்குப் பாடினாலும் ஹரி பாடும் பாடல்கள் என்னவோ அவர்கள் இருவரும் நேரடியாகப் பாடியது போலவே தோன்றும் .

ஹரியை இந்த தென்னிந்தியத் திரையுலகம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்றுதான் தோன்றுகின்றது. ஒருவேளை 80 களில் வாய்ப்பு கேட்டு வந்த போதே இளையராஜா வாய்ப்பு தந்திருந்தால் இன்றைக்கு ஒரு பெரும் உச்சம் அடைந்திருப்பாரோ என்னவோ கடவுளுக்கே வெளிச்சம்.

- கலசப்பாக்கம் சீனு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x