ஐரோப்பிய நண்பர்களின் வேதனை!

சுவிட்சர்லாந்தில் தியா
சுவிட்சர்லாந்தில் தியா
Updated on
1 min read

தமிழில் சன் மியூசிக், மலையாளத்தில் சூர்யா தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி, சூர்யா மியூசிக் சேனல் என வலம் வருபவர் தொகுப்பாளினி தியா. மிகுந்த உற்சாகத்தோடு நிகழ்ச்சிகளை வழங்கும் இவர், தனது வெளிநாட்டு நண்பர்கள் சிலர் கரோனா அச்சுறுத்தலில் சிக்கி தவிப்பதை கவலையுடன் பகிர்ந்துகொள்கிறார்.

‘‘இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பியநாடுகளுக்கு கடந்த ஆண்டு சுற்றுலாசென்றிருந்தேன். அங்கு பெரும்பாலான இடங்களில் உள்ள என் நண்பர்கள் இப்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

நான் பெரிதும் ரசித்துப் பார்த்த அந்த சாலைகள், வீதிகள் எல்லாம் இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தலைகீழாக மாறிப் போயிருக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் உள்ள என் ஃபிரெண்ட், ‘வாழ்க்கை மீதிருந்த பிடிப்பு எனக்கு இப்போது இல்லவே இல்லை’ என்று வேதனைப்பட்டார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

இத்தாலி உள்ளிட்ட சில இடங்களில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்காத நேரமே இல்லை என்றும் நண்பர்கள் தொலைபேசியில் தெரிவித்தனர். இதை எல்லாம் கேட்பதற்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. உலகின் பல பகுதிகளையும் கரோனா வைரஸ் வெகுவாக பாதித்திருக்கிறது. ‘பத்திரமாக இருங்க’ என்ற ஆறுதலை மட்டுமே நம்மால் அவர்களுக்கு கூற முடிகிறது.

நானும் இங்கே குடும்பத்தோடு நேரம் செலவிடுவது, பார்க்காமல் விட்ட என் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பது, சமையல், தியானம் என்று கழித்து வருகிறேன். ஓய்வுக்காக கிடைத்திருக்கும் இந்த நேரத்தை வீட்டில் இருந்தபடியே எல்லோரும் கலகலப்பாக, பாதுகாப்பாக, எச்சரிக்கையாக செலவிட வேண்டும்’’ என்கிறார் தியா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in