Published : 02 Apr 2020 04:19 PM
Last Updated : 02 Apr 2020 04:19 PM

எப்படி இப்படி ஷூட் பண்ணீங்க? - லிங்குசாமியைப் பாராட்டிய ப்ரியதர்ஷன்

'பையா' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தப் படத்துக்கு வசனம் எழுதிய பிருந்தா சாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் 'பையா'. 2010-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி இப்படம் வெளியானது. இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளன. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படத்தை தயாநிதி அழகிரி வெளியிட்டார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட். படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம்.

இன்று இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி, இந்தப் படத்துக்கு வசனம் எழுதிய இயக்குநர் பிருந்தா சாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"'பையா ' வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாம் ( 2010 ஏப்ரல் 2 வெளியீடு). 'ஆனந்தம்' படத்துக்குப் பிறகு எனக்கு வசனத்திற்குப் பெயர் வாங்கித் தந்த படம். காலம் ஒரு விரைவு ரயில். அந்த ரயிலில் வந்த நண்பன் நா.முத்துக்குமார் இப்போது இல்லை.

கார்த்தி, தமன்னா இரண்டு பேர் ஒரு காருடன் இரண்டு மணி நேரக் காதல் பயணம். உரையாடலில் திரைக்கதை வளரும். சில பணிகள் திரும்பிப் பார்க்கும்போது பெருமைப்படவைக்கும். இயக்குநர் லிங்குசாமிக்கும் எனக்கும் மட்டுமல்ல... படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களுக்குமே அப்படி ஒரு படம் 'பையா'.

படம் முழுக்க ஹைவேயில் படப்பிடிப்பு. அப்போது ஏதோ விளையாட்டாக எடுத்துவிட்டார் லிங்குசாமி. இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஷாட்டிலும் ரிஸ்க் தெரிகிறது. ஒரு சந்திப்பில் இயக்குநர் ப்ரியதர்ஷன், " எப்படி இப்படி ஷூட் பண்ணீங்க?" என வியப்புடன் கேட்டுப் பாராட்டினார் லிங்குசாமியை.

பத்து ஆண்டுகள் பறந்துவிட்டன படத்தில் வரும் காரை விட வேகமாக. அந்தப் படத்துக்காக எழுதிய வசனங்களில் எனக்குப் பிடித்த ஒன்று இது

"பெங்களூரிலிருந்து பாம்பே வரைக்கும் இந்தக் கார ஓட்டிக்கிட்டு வந்தேன்... அது ஒரு தூரமாவே தெரியல... இப்ப அவள வீட்டுல இறக்கி விட்டுட்டு வாசல் வரைக்கும்தான் வந்திருக்கேன்... இந்த தூரம்தாண்டா (பெருசா தெரியுது...) " என்று கார்த்தி தொண்டைக் கமறலோடு பேசும் வசனம். தமன்னாவுக்கும் பிடித்த வசனம் இது"

இவ்வாறு பிருந்தா சாரதி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x