Published : 01 Apr 2020 12:38 PM
Last Updated : 01 Apr 2020 12:38 PM

கரோனா பாதிப்பு எதிரொலி: படங்களின் வெளியீட்டை அடுத்த ஆண்டுக்கு மாற்றிய சோனி நிறுவனம்

சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தனது படங்களின் வெளியீட்டை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள், விருது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஹாலிவுட்டின் மிக முக்கியத் தயாரிப்பு நிறுவனமான சோனி பிக்சர்ஸ் இந்த ஆண்டு வெளியாகவிருந்த தனது படங்களை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''வரும் ஜூலை மாதம் 10-ம் தேதி வெளியாகவிருந்த ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்: ஆஃப்டர்லைஃப்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும்.

வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவிருந்த ‘மார்பியஸ்’ திரைப்படம் 2021 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும்.

அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவிருந்த டாம் ஹாலண்ட் நடிக்கும் ‘அன்சார்டட்’ திரைப்படம் படப்பிடிப்பு ரத்தானதால் அடுத்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி தேதி வெளியாகும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவிருந்த ‘பீட்டர் ராபிட் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல ஹாலிவுட் முன்னணி நிறுவனங்களான வார்னர் ப்ரதர்ஸ், மார்வெல், யுனிவர்ஸல் ஆகிய நிறுவனங்களும் தங்களுடைய படங்களின் வெளியீட்டை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x