Published : 31 Mar 2020 02:21 PM
Last Updated : 31 Mar 2020 02:21 PM

கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை: சூரி உருக்கம்

கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை என்று சூரி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இது தொடர்பாக நடிகர் சூரியும் தன் குழந்தைகளுடன் இணைந்து பேசி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவரும், அவரது குழந்தைகளும் பேசியிருப்பதாவது:

மகள் வெண்ணிலா: வணக்கம். நாங்கள் சின்ன பசங்கதான். நாங்கள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள். கரோனா வைரஸால் நிறையப் பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதனால் நிறையப் பேர் இறந்துள்ளனர். மருத்துவர்களும் காவல்துறையினரும் இணைந்து இதைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை யாருமே கேட்பதில்லை. ப்ளீஸ்... அவங்க சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று சொல்கிறார்கள். அதைக் கூட உங்களால் பண்ண முடியவில்லை.

முக்கியமாக கிராமப்புற மக்களுக்காகச் சொல்றேன். எதையுமே கேட்காமல் கிரிக்கெட், கால்பந்து என விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் ப்ளீஸ்.. வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். உங்களையும், எங்களையும் காப்பாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. மற்றவர்களுடன் பழகாமல் இருப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அதைப் பொறுத்துதான் ஆக வேண்டும். என்றைக்குமே நீங்கள் சாப்பிடும்போது, படுக்கும்போது கை கழுவுங்கள். எப்போதுமே நல்ல சத்தான உணவாகச் சாப்பிடுங்கள். நன்றி

மகன் சர்வான்: அனைவரையும் கையெடுத்துக் கும்பிடுறேன். வீட்டை விட்டு வெளியே வராதீங்க. மருத்துவர்களுக்கும், காவல்துறையினருக்கும் நன்றி.

சூரி: பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிந்தது கூட இங்கு நிறையப் பேருக்குத் தெரியவில்லை. நிறையப் பேரிடம் சொல்கிறேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். முக்கியமாக கிராமப்புற மக்களுக்குத்தான் சொல்றேன். ஏனென்றால் அங்கிருந்துதான் நிறையப் பேர் தொலைபேசியில் பேசினார்கள். இந்த வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை. கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் என விளையாடுகிறார்கள்.

தெரிந்த பையன் ஒருவனிடம் தொலைபேசியில் பேசினேன். கிரிக்கெட் எல்லாம் விளையாடக் கூடாது என்று சொன்னேன். நாங்கள் எல்லாம் தள்ளித் தள்ளித்தானே நின்று விளையாடுகிறோம். ஒன்றவாக நின்று விளையாடுகிறோம் என்று கிண்டலடிக்கிறான். இவ்வாறு கிண்டல் பண்ணுவதற்கும், விதண்டாவாதம் பண்ணுவதற்கும் இது நேரமில்லை. உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். பச்சிளம் குழந்தைகளுக்குத் தெரிவது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. இது நக்கல், கேலி பண்ணுவதற்கு இடமில்லை. தயவுசெய்து அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டிலிருக்கும் பெண்களுக்குச் சொல்கிறேன். ஒரு பெண் 10 வீட்டிற்குச் சென்று பேசி நலம் விசாரித்துவிட்டு வருகிறீர்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் எனப் பரவிக் கொண்டே போகிறது. நம்மால் அடுத்தவருக்கும், அடுத்தவரால் நமக்கும் வரும். தயவுசெய்து அனைவரும் புரிந்துகொண்டு, கொஞ்ச நாளைக்கு வீட்டிற்குள்ளேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள். எவ்வளவோ பேர் நமக்காக வேலை செய்கிறார்கள். ஏன் அவர்கள் சொல்வதை யாருமே கேட்பதில்லை.

நம்மிடம் இருக்கும் காவல்துறையைக் கொண்டு வீட்டுக்கு ஒரு அதிகாரியைப் போட முடியாது. அவ்வளவு போலீஸ் எல்லாம் கிடையாது. அவர்களும் அனைவரையும் பார்க்க வேண்டும். தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். அனைவரும் கவனமாக வீட்டிற்குள் இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். கிராமப்புற மக்களுக்குத் தான் முக்கியமாகச் சொல்கிறேன். கையெடுத்துக் கும்பிடுகிறேன். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அனைத்து மக்களையும் காப்பாற்றுங்கள். நீங்களும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்."

இவ்வாறு சூரியும், அவருடைய குழந்தைகளும் பேசியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x