Published : 31 Mar 2020 12:02 PM
Last Updated : 31 Mar 2020 12:02 PM

சமூக இடைவெளி என்பது மனதுக்குள் நிரந்தரமாகிவிடுமோ என அச்சம்: விஜய் மில்டன்

சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது என இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். மேலும், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டிலிருந்து வெளியே வருகிறார்கள்.

மேலும், அப்படி வந்தாலுமே கடைகளில் இடைவெளி விட்டு நிற்கச் சொல்லி கோடுகள் எல்லாம் போட்டு, கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வழிவகை செய்துள்ளனர். தற்போது இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் மில்டன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சமூகப் பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை குடும்பப் பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சி மருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டோம்.

ஏற்கெனவே கயிறு கட்டியவன், கட்டாதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம் மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம். சக மனிதர்களை ஏன் நண்பர்களைக் கூட அவநம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டுவிட்டது. நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என அச்சமாக இருக்கிறது.

இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக்கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச்செல்வது தான் சமூகப் பொறுப்பு (social responsibility) என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகிவிடுமோ என்று அச்சம் வருகிறது".

இவ்வாறு விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x