

நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டார்களா என்ற சந்தேகத்தை சமீபத்திய வீடியோ ஒன்று கிளப்பியுள்ளது.
2018-ம் ஆண்டிலிருந்து ஆலியாவும், ரன்பீரும் காதலித்து வருகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதைத் தாண்டி இருவரையும் பொது இடங்களில் ஒன்றாகப் பார்ப்பது அரிதே. தற்போது கரோனா பாதிப்பால் இந்தியா முழுக்க சுய ஊரடங்கு அமலில் இருக்கிறது. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து சினிமா கலைஞர்களும் வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கின்றனர். சிலர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நேரலை, புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சுய ஊரடங்கால் ரன்பீரும், ஆலியாவும் கூட வீட்டிலேயே இருக்கின்றனர். ஒரு அபார்ட்மென்டுக்குள் இவர்கள் இருவரும் உடற்பயிற்சி செய்வதற்கான உடைகளில் இருக்க, ரன்பீர் வளர்ப்பு நாயுடன் உலா வரும் சிறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. இதனால்தான் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்களா என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. இருவருக்குமே தனித்தனியாக வீடுகள் இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் இடம் யாருடைய வீடு என்பது தெளிவாகவில்லை.
மேலும், சமீபத்தில் ஆலியா பட் தனது செல்லப்பிராணியையும், ரன்பீர் வளர்க்கும் செல்லப்பிராணியையும் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுவும் ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளன.