

பிரான்ஸ் நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரை விழா அரங்கம் ஆதரவற்றோர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆதரவற்ற மற்றும் சாலையோரம் வசிக்கும் வீடற்ற மக்களுக்காகவும் உலக நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கரோனா அச்சுறுத்தலில் இருந்து ஆதரவற்றோர்களைக் காப்பாற்ற உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் பலாய்ஸ் கட்டிடம் ஆதரவற்றோர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கேன்ஸ் நகர மேயர் டேவிட் லிஸ்னார்ட் கூறுகையில், ''வீடற்றவர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களையும் கரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் 80 பேர் தங்கக்கூடிய அளவுக்கு படுக்கையுடன் கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேன்டீன், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு சுகாதாரமான உணவு வகைகளும், மருத்துவ வசதிகளும் செய்யப்பட உள்ளன'' என்றார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.