Published : 25 Mar 2020 04:48 PM
Last Updated : 25 Mar 2020 04:48 PM

சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்திய பார்த்திபன்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பணிகளுக்கு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பார்த்திபன்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. தமிழகத்துக்கு கரோனா பாதிப்பு வந்ததிலிருந்தே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவர்களுடன் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

மேலும், அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறித்தும் ட்வீட் செய்து வருகிறார். இவரது தொடர் நடவடிக்கைகளுக்குப் பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, இன்று (மார்ச் 25) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் பார்த்திபன்.

அவரைச் சந்தித்தது தொடர்பாக பார்த்திபன், "சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடமையைச் செவ்வனே செய்வதற்காகப் பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.

பொக்கே கொடுப்பதற்குப் பதிலாக சானிடைசர் 5 லிட்டர் கேன் ஒன்றில் “மலர் கொத்தாய் மனமே திகழ்கையில், நல்வாழ்வைக் காக்கும் மாண்புமிகு கரங்களுக்கு” என்றெழுதி தமிழக மக்களின் சார்பில் வழங்கினேன். இன்னும் கூடுதலான மருத்துவ வசதிகளுக்குத் திருமண மண்டபங்கள் போன்ற தனியார் இடங்களை இப்போதே சுத்தப்படுத்தித் தயார் நிலையில் வைத்துக் கொண்டால் அவசர நிலைக்கு உதவியாய் இருக்குமெனக் கருத்துத் தெரிவித்தேன். அந்த நல் யோசனையைக் கருத்தில் கொண்டு செயல்பச் செய்கிறேன் என்றார்.

தமிழகமெங்கும் அந்நோயை எவ்வாறு கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் சுற்றிக் காட்டினார்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

தனது 3 வீடுகளை மருத்துவமனையாக உபயோகிக்கக் கொடுப்பதாக பார்த்திபன் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் குறிப்பிட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x