Published : 24 Mar 2020 08:59 PM
Last Updated : 24 Mar 2020 08:59 PM

கொஞ்சமாவது புத்தியை உபயோகியுங்கள்; தயவுசெய்து வீட்டில் இருங்கள்: வரலட்சுமி சாடல்

கொஞ்சமாவது புத்தியை உபயோகியுங்கள். தயவுசெய்து வீட்டில் இருங்கள் என்று வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் மக்களை வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தி வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

”வணக்கம். அனைவரும் வீட்டில் இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் வீட்டில்தான் இருக்கிறேன். ஒரு 2, 3 விஷயம் சொல்ல வேண்டும் என தோன்றியது. சொல்லிவிடுகிறேன், ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம். முதலில் ஒரு குரூப் சுற்றிக் கொண்டிருக்கிறது... கரோனா எல்லாம் நமக்கு வராது என்று. நான் அவர்களுடன்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். கரோனா தொற்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

இரண்டாவது, சுமார் 27% பேர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளோம். மீதி அனைவரும் வெளியேதான் இருக்கிறார்கள். இதன் ஆபத்து யாருக்கும் புரிவதில்லை. 'CONTAGION' என்ற ஒரு படம் உள்ளது. அந்தப் படத்தைப் பாருங்கள். அதைப் பார்த்தாலே இந்தத் தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது என்று புரியும். ரொம்பவே தெளிவாகவே சொல்லியிருப்பார்கள். அக்கம் பக்கத்தில் நிறைய வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பாதிப்பு நடக்கிறது. அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்யுங்கள். தள்ளி நின்றே பண்ணுங்கள்.

வாடகை வாங்குபவர்கள் கவனத்துக்கு. இங்கு நிறையப் பேருக்குச் சம்பளம் கிடையாது. அதனால் ஒரு மாதத்துக்காவது வாடகையைத் தள்ளுபடி பண்ணுங்கள். அப்படிச் செய்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். நிறையப் பேர் ஊருக்கு ஓடுகிறார்கள். ஏனென்றால் இங்கு தங்க இடமில்லை. அதை எல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நிறையப் பேர் பயப்படுகிறார்கள். அது வேண்டாம். கடைகள் எல்லாம் பார்க்கும் போது ஃபுல்லாக இருக்கிறது. அரசாங்கம் கடைகளைத் திறந்து வைக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, பயப்பட வேண்டாம்.

இரண்டே விஷயம்தான். ஒன்று, ஜாலியாக வெளியே சுற்றி, கரோனாவை இந்தியா முழுக்கப் பரப்பி இறப்பை அதிகரிப்பது. இரண்டாவது, ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்திருங்கள். 2-ம் மாதம் ஜாலியாக வேலைக்குப் போகலாம். ஆகவே, நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் 134 கோடி மக்கள் இருக்கிறார்கள். இத்தாலி மாதிரி சின்ன நாடு அல்ல. ஆகவே இதில் பரவியது என்றால்.. கொஞ்சமாவது புத்தியை உபயோகியுங்கள். தயவுசெய்து வீட்டில் இருங்கள். தேவையென்றால் மட்டுமே வெளியே செல்லுங்கள். ஒன்றிணைந்து போராடி வெல்வோம்”.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x