

கரோனா கிருமித் தொற்று இந்தியாவில் பரவி வரும் இந்த சூழலில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், பொது இடங்களுக்கு வரக்கூடாது மேலும் தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் ஷாரூக் கான் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளச் சர்வதேச அளவில் பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் பல நடிகர்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் குறித்து நடிகர் ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லோரும் சேர்ந்து கிருமித் தொற்றுக்கு எதிரான இந்தப் போரில் போராடுவோம் என்று பதிவிட்டுள்ளார். இத்துடன் ஒரு காணொலிப் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், "பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசியம் இருந்தால் மட்டுமே ட்ரெய்ன், பேருந்து ஆகியவற்றில் பயணப்பட வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்த 10 - 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கமும், குடிமக்களும் சேர்ந்து வலிமையாகப் போராட வேண்டும். மேலும் இந்த சூழலில் பதட்டப்படாமல், தவறான தகவல்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். அரசாங்கம் அளித்துள்ள வழிமுறைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்த சுய ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிட்டிருந்தார் ஷாரூக் கான்.