

கரோனா பாதிப்பால் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான 'ஆன்வர்ட்', திட்டமிட்ட தேதிக்குப் பல நாட்கள் முன்னதாகவே டிஜிட்டல் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கரோனா தொற்று பீதியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. நிலைமை சீராகும் வரை திரையரங்கங்கள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதால் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் சில அவர்களின் சமீபத்திய திரைப்பட வெளியீடுகளை டிஜிட்டல் பதிவிறக்கத்துக்காக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவு செய்துள்ளன.
மேலும் கரோனா அச்சம் காரணமாகப் பலரும் வீட்டிலிருந்தே அலுவல் வேலை செய்து கொண்டிருப்பதால், பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், டிஜிட்டலில் படத்தை வெளியிட்டு இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன.
அப்படி டிஸ்னி நிறுவனம் தனது சமீபத்திய வெளியீடான 'ஆன்வர்ட்' திரைப்படத்தை வெள்ளிக்கிழமை மாலை டிஜிட்டல் பதிப்பில் வெளியிட்டது.
கடந்த மார்ச் 6-ஆம் தேதி வெளியான மாயாஜால அனிமேஷன் திரைப்படம் 'ஆன்வர்ட்'. கிறிஸ் ப்ராட், டாம் ஹாலண்ட் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இதில் குரல் கொடுத்திருந்தனர்.
விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மற்ற பிக்ஸார் அனிமேஷன் படங்களை விட சற்று குறைவாகவே வசூல் செய்தது. இருப்பினும் முதல் இரண்டு வாரங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தையே பெற்றது.
வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் தளத்தில் ஆன்வர்ட் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.