Published : 21 Mar 2020 12:49 PM
Last Updated : 21 Mar 2020 12:49 PM

கரோனா முன்னெச்சரிக்கை: மக்களுக்கு வீடியோ வடிவில் கமல் வேண்டுகோள்

கரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாகத் தமிழக மக்களுக்கு வீடியோ வடிவில் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்காக கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், பெரிய ஜவுளி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அனைவருமே மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் வீடியோ மூலமாகத் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

”கரோனா வைரஸ் பாதிப்பு என்பது 4-வது, 5-வது வாரத்தில் பன்மடங்கு அதிகமாவதை நான் பல நாடுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எதனால், வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாதபோது பாதிக்கப்பட்ட சிலர் பல இடங்களுக்குப் போயிருப்பார்கள். பாதிக்கப்பட்டது 5 பேர் என்றால், அதிலிருந்து 25 பேருக்குப் பரவும். அது இன்னும் 100 பேருக்குப் பரவாமல் தடுப்பதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.

சமூகத்திடமிருந்து விலகியிருத்தல். அதீத விழிப்புணர்வு தேவைப்படுகிற 4-வது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடத்துக்குப் போவதைத் தவிர்த்துவிடுங்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். நான் இப்போது வெளியே வந்திருப்பது, இந்த அறிக்கையை உங்களுக்குச் சொல்வதற்காகத்தான்.

இப்படியெல்லாம் செய்வதால் வைரஸ் உங்களுக்குப் பரவாமலும், உங்களிடமிருந்து உங்களுக்கு நெருக்கமானவர்களுக்குப் பரவாமலும் தடுக்கலாம். கரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்று கிடையாது. ஆனால், வெகு சிலருக்கு அவர்களது உடல்நிலையைப் பொறுத்து அது ஆபத்தாக மாறலாம்.

ஆகையால்தான், அனைவரிடமிருந்தும் விலகியிருத்தல் அவசியமானது. வீட்டில் இருங்கள், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுங்கள். மனதுக்குப் பிடித்தவர்களுடன் தினமும் தொலைபேசியில் பேசுங்கள். ஆனால், யாராவது வாருங்கள் சந்திக்கலாம் என்று கூப்பிட்டால் தவிர்த்துவிடுங்கள் ப்ளீஸ். நம்மால் அவர்களுக்கோ, அவர்களால் நமக்கோ எதுவும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.

வந்தால் செய்ய வேண்டியதை, வரும் முன்னாடியே செய்வோம். விலகியிருங்கள், பாதுகாப்பாக இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையாலும், அசட்டுத் தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. முன்னெச்சரிக்கைதான் முக்கியமான விஷயம். மறந்துவிடாதீர்கள்.

வீட்டில இருக்கச் சொல்கிறார்களே, வருமானத்துக்கு என்ன பண்ணப் போகிறோம்? மார்ச், ஏப்ரலில் பசங்க ஸ்கூல் பீஸ் கட்டவேண்டுமே என்று ஏகப்பட்ட குழப்பங்கள், நாளைக்கு வருமானம் வருமா? கடையெல்லாம் அடைச்சுருமேனு நிறைய கேள்விகள் இருந்தாலும், இது எல்லாமே செய்ய நீங்கள் உடல் நலத்தோட இருப்பது ரொம்ப முக்கியம். அதனாலதான் இந்த 2 வாரம் மிக முக்கியமானது. வேலை என்னத்துக்கு ஆகும்? பசங்க படிப்பு என்ன ஆகும்? தொழில் என்ன ஆகும் என்ற உங்களுடைய நியாயமான பயங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து, இந்த 2 வாரத்தை எப்படிச் சரியா பயன்படுத்துவது எனப் பார்க்கிறதுதான் நமக்கு இருக்கும் வழி.

வேலை, தொழில் என்று எப்பவுமே ஓடிட்டு இருந்த ஆள் நீங்களா இருந்தீங்கனா இந்த 2 வாரம் உங்கள் குடும்பத்தோடு நேரத்தைச் செலவிடலாம். இத்தனை வருஷம் நீங்க தெரிந்துகொண்ட விஷயங்களை உங்கள் குழந்தைகள் கிட்ட சொல்லுங்கள். நீங்க படிக்கணும்னு நினைச்சு முடியாம போன அந்த புத்தகம், பார்க்கணும்னு நினைச்சு மிஸ் பண்ண படம், கத்துக்கணும்னு நினைத்த இசை, நேரம் இல்லைனு நீங்கள் தள்ளிப்போட்டீர்களே, அந்த போன் கால்கள் எல்லாத்தையும் பண்ணுங்க. வீட்டில் இருக்கும் பெரியவர்களோட நேரத்தைச் செலவிடுங்கள்.

குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸ் சேர்த்து விடுங்க, புது விஷயங்களைக் கத்துக்கட்டும். அவசர கால சமையல் எப்படிங்கிறதை சொல்லிக்குடுங்க. இயந்திரமா ஓடிட்டு இருந்த வாழ்க்கையில் இருந்து காலத்தின் கட்டாயத்தால் ஒரு சின்ன இடைவெளி கிடைத்திருக்கிறது. அதை சரியா பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். பத்திரமா இருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமென்று படித்ததை வழக்கத்துக்குக் கொண்டு வர நேரம் இது”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x