Published : 20 Mar 2020 03:05 PM
Last Updated : 20 Mar 2020 03:05 PM

சுய ஊரடங்கு: பிரதமர் மோடியின் முயற்சிக்கு கமல் ஆதரவு; ரஜினி, விஜய், அஜித்துக்கும் அழைப்பு

சுய ஊரடங்கு தொடர்பான பிரதமர் மோடியின் முயற்சிக்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், தனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக அளவில் கடும் அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆகவே, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 22-ம் தேதி 'சுய ஊரடங்கு' முறையை அமல்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கு அமிதாப் பச்சன் தொடங்கி பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் பலரும், பிரதமரின் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இந்த முயற்சிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "மக்கள் ஊரடங்குக்கான பிரதமரின் அறைகூவலுக்கு நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நம் இனத்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் பேரழிவு இது.

எல்லோரும் வீட்டிலிருந்தால் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். மார்ச் 22-ம் தேதி ஞாயிறு அன்று, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க நான் என் ரசிகர்கள், நண்பர்கள், என் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் கமல்.

இதோடு தனது திரையுலக நண்பர்கள் சிலரின் பெயரையும் டேக் செய்துள்ளார். அதில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஜிப்ரான் மற்றும் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோரின் ட்விட்டர் ஐடிக்கள் இடம் பெற்றுள்ளன. இதில் அஜித், சிம்பு, இளையராஜா ஆகியோர் ட்விட்டர் தளத்தில் இல்லாத காரணத்தால், அவர்களுடைய பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளார் கமல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x