

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடலை அப்படியே மாற்றி 'ஒய் திஸ் கரோனா' எனப் பாடியுள்ள பாடல் ட்விட்டரில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான படம் '3'. இந்தப் படத்தின் மூலமாகவே அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம் பெற்ற 'கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. பலரும் இந்தப் பாடலை வைத்து நடனமாடவே உலகமெங்கும் பிரபலமானது. இந்தப் பாடல் அளவுக்கு, உலகமெங்கும் வேறு எந்தவொரு தமிழ்ப் பாடலும் பிரபலமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் பாடலையும், பாடல் வரிகளையும் அப்படியே கரோனா வைரஸ் தொடர்பாக மாற்றிப் பாடி ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஜேமி லிவர். இவர் இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஜானி லிவரின் மகளாவார். மேடை நிகழ்ச்சிகளில் காமெடி செய்து மிகவும் பிரபலமானவர் ஜேமி லிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் நண்பர்களுடன் இணைந்து கரோனா வைரஸ் குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் காமெடியான வரிகள் மூலம் இந்தப் பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது ட்விட்டரில் வைரலாகத் தொடங்கியுள்ளது.