

கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பாலிவுட்டில் தினக்கூலி பணியாளர்களுக்கு நிவாரண நிதி அளிக்கப்படவுள்ளது.
கரோனா பாதிப்பால் மார்ச் 19 தொடங்கி 31-ஆம் தேதி வரை அனைத்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாக பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை அடுத்து இதனால் பாதிக்கப்படும் தினக்கூலி பணியாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று திரைத்துறையினர் சிலர் சொன்ன யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது. செவ்வாய் அன்று இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், தினக்கூலி பணியாளர்களுக்கான நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்தி அறிக்கையையும் இந்திய (சினிமா) தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
சங்கத்தின் தலைவரான தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூர், "ஒட்டு மொத்த திரைத்துறையும் இதற்கு நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இந்த சிக்கலான நேரத்தில் நமது சக பணியாளர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கா நம்மால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வோம்" என்று கூறியுள்ளார்.
இதற்காக நிதி வழங்க விரும்புவர்கள் support@producersguildindia.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால், எப்படி நிதி வழங்கலாம் என்பதற்கான வழிகாட்டல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.