Published : 16 Mar 2020 07:22 PM
Last Updated : 16 Mar 2020 07:22 PM

கரோனா அச்சம்: மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தம்; பெப்சி அறிவிப்பு

கரோனா அச்சத்தால் மார்ச் 19-ம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது.

உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனம், மால்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழ்த் திரையுலகில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பெப்சி தொழிலாளர்கள் மார்ச் 19-ம் தேதி முதல் எந்தவொரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”உலகம் முழுவதும் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் நீங்கள் நன்கு அறிவீர்கள். அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தின் பல முன்னேறிய நாடுகள் கூட கரோனா பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, பல லட்சம் கோடிகளை இதற்காக ஒதுக்கி, கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளை முழுவீச்சில் எடுத்து வருகின்றன.

நமது மத்திய அரசும் மாநில அரசும் இதன் அபாயத்தை நன்கு உணர்ந்து, கரோனா வைரஸ் நமது மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு விதமான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

வந்த பின் போராடுவதை விட வருமுன் காப்பதே உத்தமம் என்ற அளவில் போராடும் நமது அரசுகளை மீறியும் கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. பல்வேறு விதமான வசதிகளும் உள்ள மேற்கத்திய நாடுகள் கூட இந்த கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராட முடியாமல் திணறி வரும் நிலையில் பாதுகாப்பு வசதிகள் குறைந்த நமது நாட்டில் இதை நாம் அனைவரும் இணைந்து போராடவில்லை என்றால் பாதிப்புகளைத் தடுப்பது மிகவும் சிரமம் ஆகும்.

அகில இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளை 19.3.2020 முதல் நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது.

நமது மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்புகள் தற்போது குறைவாக உள்ளது என்றாலும், திரைப்படத் துறையில் பாதுகாப்பும் சுகாதாரமும் மிகவும் குறைவாக உள்ளதால், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் 19.3.2020 முதல் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் பொருளாதார ரீதியிலும் தயாரிப்பு ரீதியாகவும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்றாலும் நமது தொழிலாளர்களின் வாழ்வு மிகவும் முக்கியமானது என்பதால் இந்தக் கடினமான முடிவை எடுத்துள்ளோம். எனவே திரைப்படத் தொழிலாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு பெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x