Published : 15 Mar 2020 08:02 PM
Last Updated : 15 Mar 2020 08:02 PM

என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம் 'கத்தி': அனிருத் 

என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படம் 'கத்தி' என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் அனிருத் பேசியதாவது:

“இந்தப் படத்தில் என்னோடு பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி சாருடைய காட்சிகளுக்கு இசையமைப்பது ரொம்ப பிடிக்கும். 'நானும் ரவுடிதான்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் இணைகிறோம். சில இயக்குநர்கள் ரொம்ப கூலாக இருப்பார்கள். ஆனால், அதில் உச்சக்கட்டமாக ரொம்பவே கூலாக இருப்பது யாரென்றால் லோகேஷ் தான்.

அவர் இதற்கு முன்பு இயக்கிய 2 படங்களுக்குமே பாடல்கள் வாங்கி படப்பிடிப்புக்குச் சென்றதே கிடையாது. அது எனக்கு உபயோகமாக இருந்தது. ஏனென்றால், அவரது முந்தைய படங்களில் பாடல்கள் கிடையாது. இந்தப் படத்தில் 12 பாடல்கள் இருக்கிறது. இன்றைக்கு 8 பாடல்கள் வெளியாகிறது. மீதி பாடல்கள் விரைவில் வெளியாகும். லோகேஷ் கனகராஜ் ரொம்ப அற்புதமான மனிதர். அவருடைய டீம்மே சூப்பரான டீம். ரொம்ப செமையான படம் எடுத்துள்ளீர்கள். கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அடுத்ததாக விஜய் சார். சில படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த போது, என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற படம் என்றால் அது 'கத்தி' தான். ரொம்ப அக்கறை எடுத்துக் கொள்கிற நபர் விஜய் சார். அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்களுக்கு இந்தப் படத்தின் பாடல்கள், பின்னணி இசை பிடிக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு அனைத்து படமுமே ப்ளாக்பஸ்டர் தான். நாங்கள் நண்பர்கள் எல்லாம் இணைந்திருப்பதால், இந்தப் படம் பெரிய ப்ளாக்பஸ்டராக அமையும்.

'மாஸ்டர்' டீமே ரொம்ப ஜாலியான மற்றும் அதிக உழைக்கக்கூடிய டீம். ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் அனைத்துமே வெற்றியடைந்து வருகிறது. அது போலப் படமும் வெற்றியடையும்”

இவ்வாறு அனிருத் பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x