Last Updated : 04 Aug, 2015 05:39 PM

 

Published : 04 Aug 2015 05:39 PM
Last Updated : 04 Aug 2015 05:39 PM

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இசைக்கலைஞர்கள் சங்கம் முடிவு

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை அமைக்க இசைக்கலைஞர்கள் சங்கம் முடிவு செய்திருக்கிறது.

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் வடபழனியில் நடைபெற்றது. தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் படத்தை இளையராஜா திறந்து வைத்தார்.

இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் இளையராஜா பேசியது, "தமிழ்நாடு திரையிசை கலைஞர்கள் சங்கம் உருவாவதற்கு முக்கிய காரணமே நம்ம அண்ணன் எம்.எஸ்.வி. தான். இந்த சங்கத்தை உருவாக்க பிலிப்ஸ், மங்களமூர்த்தி, ஹென்றி டேனியல், ஃபாப்ஸ் போன்ற கலைஞர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

சாப்பிடக்கூட நேரமே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்த இசைக் கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த இடத்திலேயே சம்பளம் கிடைக்கும் முறையையும் கொண்டு வருவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் அண்ணன் எம்.எஸ்.வி. தான்.

இதே போல் கவிஞர்களை ஊக்குவிப்பதிலும் அண்ணன் முதல் ஆளாக இருந்தார். ‘கவிஞர்கள் பாபநாசம் சிவனும், கண்ணதாசனும் எனக்கு இரு கண்களை போன்றவர்கள்’ என்றவர், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக் கண்ணைப் போன்றவர்’ என்றார்.

அண்ணன் இசையமைத்த படத்தின் பெயர் தெரியாவிட்டாலும் இன்றளவுக்கும் அவருடைய பாட்டு அந்த படத்தின் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும். ஒரு பாட்டு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணன் வடிவமைத்தார்.

அதேபோல இன்றைக்கு நாமெல்லாம் கர்வம் கொள்கிற மாதிரி நம்ம அண்ணன் நம்மிடையே வாழ்ந்தார். கவிஞர் கண்ணதாசன் எவ்வளவோ கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவையெல்லாம் மக்களை போய்ச் சேர்ந்ததா..? அண்ணன் எம்.எஸ்.வி. இசையமைத்த பிறகுதான் அது மக்களை சென்றடைந்தது.

அவருடைய இசை என்னைப் போன்ற மரமண்டைகளுக்கும் வந்து சேர்ந்தது. அப்படிபட்ட எம்.எஸ்.வி. அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம் வைத்தால், அதை நானே செய்து விடுவேன் என்பதாலேயோ என்னவோ அதற்கு முன்கூட்டியே அந்த விஷயம் நடந்து விட்டது.

இன்று இளைஞர்களுக்கெல்லாம் ஊக்கமாக இருந்த கலாம் மறந்து விட்டார். நமது ரத்த நாளங்களில் கலந்துவிட்ட அண்ணன் எம்.எஸ்.வி.யும் மறைந்து விட்டார். இந்த நாட்டின் கர்வ காரணங்கள் மறைந்து விட்டார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம், அவர்களுடைய இசையும், கலாம் தந்த ஊக்கமும் வருகின்ற சமுதாயத்திற்கு ஊக்கமாக இருக்கும்" என்று பேசினார் இளையராஜா.

முன்னதாக பேசிய கவிஞர் கணணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் எம்.எஸ்.வி.க்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும். சென்னையில் லஸ் கார்னர் அல்லது கடற்கரை சந்திப்பில் சிலையை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய கங்கை அமரன், "எம்.எஸ்.வி.க்கு சிலை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. அந்த முயற்சிகளை நானே முன் நின்று செய்யப் போகிறேன்" என்று அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x