Published : 12 Mar 2020 09:43 PM
Last Updated : 12 Mar 2020 09:43 PM

விஷால் இனி உன்னை விடமாட்டேன்: மிஷ்கின் ஆவேசம் 

நடிகர் விஷால், மிஷ்கின் மோதலை அடுத்து வெப்சீரிஸ் விழாவில் விஷாலை மிஷ்கின் கடுமையாக தாக்கி பேசினார். இன்றிலிருந்து உனக்கு தொல்லை ஆரம்பம், நிம்மதியாக தூங்க முடியாது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'துப்பறிவாளன் 2' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்துள்ளது. அதற்குப் பிறகு விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், இயக்குநர் மிஷ்கின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

தற்போது இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை விஷாலே ஏற்றுக் கொண்டுள்ளார். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படமாக 'துப்பறிவாளன் 2' அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விஷாலுக்கு மிஷ்கின் விதித்த 15 நிபந்தனைகள் கொண்ட கடிதமும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று 'கண்ணாமூச்சி' வெப்சீரிஸ் அறிமுக விழாவில் கலந்துக்கொண்ட இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் 2 சர்ச்சைக் குறித்து விஷாலை கடுமையாக தாக்கிப் பேசினார்.
அவர்து பேச்சு வருமாறு:

ஒரு வருடமாக ஒரு கதையை யோசித்து எழுதினேன். என்னுடைய ஒவ்வொரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியையும் 10 நாட்கள் எழுதுவேன். 'துப்பறிவாளன் 2' கதையின் க்ளைமாக்ஸ் காட்சியும் அப்படித்தான். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒரு சகோதரனை மோசமாக பேசும் பொழுதும், பார்க்கும் போதும் அவரை என் தோளில் போட்டு சகோதரனாக பாவித்தேன். என் நிஜ சகோதரனிடம் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவருக்காக 2-ம் பாகம் எழுதினேன்.

2018-ல் ’துப்பறிவாளன்’ வெளியானது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஸ்ட்ரைக் நடைபெற்றது. அப்போது 3 உதவியாளர்களுடன் க்ளைமாக்ஸ் காட்சியை நான் மட்டும் ஷுட் செய்தேன். கடைசியில் எங்களுக்கு பணமில்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை, 6 மணி நேரத்தில் எடுத்துக் கொடுத்தேன். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது அனைவருக்கும் தெரியும்.

அதற்கு முந்தைய 3 படங்கள் விஷாலுக்கு ப்ளாப். ’துப்பறிவாளன்’ வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 3 கோடி ரூபாய். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கதை எழுதச் சொன்னார், எழுதினேன். நிறைய கடன் இருக்கு, தமிழ் மட்டும் வேண்டாம், இந்திய அளவிலான மொழிகளில் எழுதலாம் என்று சொல்லி கோகினூர் வைரத்தை வைத்து கதை எழுதுகிறேன் என எழுதினேன்.

அது வந்து ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா என அனைத்து மொழிகளிலும் டப்பிங் பண்ணலாம் எனச் சொன்னேன். அந்தக் கதையை எழுதி முடித்தவுடன், அதைக் கேட்டுவிட்டு பாபி என்ற தயாரிப்பாளர் கேட்டுவிட்டு பிடித்துப் போய் எனக்கு அட்வான்ஸ் தொகை வேறு கொடுத்தார். அதற்குப் பிறகு அந்தக் கதையைக் கேட்டு விஷாலுக்கு பிடித்துப் போய் என்னை கட்டிப்பிடித்து அழுதார். இந்தக் கதை எனக்கு போதும் என்றார். இதை வைத்து என் அனைத்து கடனையும் அடைத்துவிடுவேன் என்றார். அந்த பாபி தயாரிப்பாளர் வேண்டாம், நானே தயாரிக்கிறேன் என்றார். அப்போது ஆரம்பித்தது என் தலைவலி.

19 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று சொன்னேன். நீ பண்ண முடியாது, நீ கடனாளியாக இருக்கிறாய், ’ஆக்‌ஷன்’ வேறு வெளியாகவுள்ளது என்றும் சொன்னேன். ஒரு வேளை அந்தப் படம் சரியாக போகவில்லை என்றால், உன் மீது அதிகமான பாரம் வரும். ஆகையால் இந்தப் படத்தை தொடாதே என்றும் தெரிவித்தேன். இல்லை சார், இந்தப் படம் நான் பண்ணுவேன். எனக்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார்.

அப்போது, 'துப்பறிவாளன் 3' ஆக இதைப் பண்ணலாம். 2-ம் பாகமாக சென்னையில் நடப்பது மாதிரி 10 கோடி ரூபாய் பண்ணலாம். நான் எழுதி தருகிறேன் என்று சொன்னேன். அதற்கு, இந்தப் படத்தை தான் பண்ண வேண்டும் என்று சொன்னார். பல வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், இங்கிலாந்திற்கு சென்றது கிடையாது. இந்தக் கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது 7 லட்ச ரூபாய் மட்டும் தான்.

ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்ச ரூபாய் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் நிரூபக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராவதற்கே தகுதியற்றவன் என்று சொல்வேன். விஷால் சொன்னவுடன் எழுதிய அனைவருமே, அதற்கான ஆதாரம் எங்கே என்று அவரிடம் கேட்க வேண்டும்.

அதற்குப் பிறகு 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய் தான். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை தான் வந்துள்ளது. அந்த 13 கோடி ரூபாய் செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு போய் படம் பண்ண வேண்டும் என்றால் உங்களுடைய கம்பெனியில் இருந்து பண்ண முடியாது. அங்கு ஒரு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் புட்லூர் அம்மன் நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு விஷால் நிறுவனத்திலிருந்து எவ்வளவு பணம் அனுப்பப்பட்டது என்று கேட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்.

என் தாயை அசிங்கமாக திட்டினார். விஷாலுக்கு என்ன துரோகம் செய்தேன். நான் செய்த ஒரே துரோகம், அவனிடம் அறத்தோடு இருந்தது தான். அவன் தப்பு பண்ணும் போதெல்லாம், தப்பு பண்ணாதடா என்று சொன்னது தான். அவனுக்காக நல்ல கதை எழுதிக் கொடுத்தது என் தவறு. எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறான். என்னால் எங்கேயும் வேலை செய்ய முடியும்.

நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். என் படங்கள் சொல்லும் நான் யார் என்று? 'பிசாசு' படத்தில் ஒரு பேயை தேவதை ஆக்கியவன் நான். 'சைக்கோ' படத்தில் 14 கொலைகள் பண்ணியவனையும் மன்னிக்கலாம் என்று சொன்னவன் நான். என்னுடைய கதைகள் இருக்கிறது அறம், நீ என்னை சொல்ல வேண்டாம் நான் கெட்டவன் என்று.

இவ்வளவு நாள் கழித்து ஏன் இப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் என்று கேட்டீர்களா? 10 நாட்களாக என் அலுவலகத்துக்கு அலைத்து கதையைக் கொடு, NOC கொடு என்று என் உயிரை எடுத்து வாங்கிச் சென்றார்கள். அப்போது என் தம்பி, எடுத்து கொடுத்துவிடுங்கள் அண்ணா என்று சொன்னான். நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கதோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா?.

8 மாதங்கள் உட்கார்ந்து கதை எழுதி, 32 நாட்கள் ஷுட் செய்து, NOC கொடுத்த பின்பு என்னைப் பற்றி தவறாக பேசுகிறார். உன்னால் ஒரு கதை எழுத முடியுமா? 'சக்ரா' படத்தின் கதைக்கு கூட நான் உதவியிருக்கிறேன். இவனெல்லாம் என்னை மாதிரி படித்திருக்கிறானா?

நீ என்ன எம்ஜிஆரா, கலைஞரா.. சமூகம் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் என்ன செய்தாய் என்று தெரியாதா?. என்னை தயாரிப்பாளர் சங்கத்தில் நிற்கச் சொல்லி தாணு உள்ளிட்டோரை தவறாகப் பேசச் சொன்னார். உன் தாய், தந்தை சொல்வார்கள் நான் எப்படி பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பார்கள் என்று சொன்னேன். அது தான் நடந்தது. இன்று படம் நின்று போனதற்கு அவர்கள் தான் காரணம்.

என்னுடைய தயாரிப்பாளர்கள் ஜபக், அகோரம், உதயநிதி ஆகியோரிடம் நான் எப்படி பணிபுரிந்திருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும். என் தம்பியை அடித்தார்கள். இனி விடமாட்டேன். தமிழகத்தில் நான் மட்டும் தான் அவரை பத்திரமாக பார்த்துக் கொண்டேன். இனி தமிழ்நாட்டை அவரிடமிருந்து நான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்தாரா?. இதுவொரு தமிழனுடைய கோபம். தம்பி விஷாலு.. உன் வேலையை எல்லாம் இங்கு காட்டாதே. உனக்கு இருக்கு ஆப்பு. இது தான் தொடக்கம். இன்று முதல் நீ தூங்கவே மாட்டாய். உன் தரப்பில் நியாயம் இருந்தால் வா குருஷேத்ரப் போருக்கு. வா போரிடலாம்”.

இவ்வாறு மிஷ்கின் சவால் விடும் வகையில் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x