

'ஆயிரத்தில் ஒருவன் 2' குறித்து பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, செல்வராகவன் பதிலளித்துள்ளார்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. ரவீந்திரன் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. ஒளிப்பதிவாளராக ராம்ஜி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவினாலும், இப்போது வரை பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் செல்வராகவன், கார்த்தி, பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமும் 'ஆயிரத்தில் ஒருவன்' 2-ம் பாகம் வெளிவருமா என்ற கேள்வி கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அனைவருமே அது தயாரிப்பாளர் கையில் தான் இருக்கிறது எனப் பதிலளித்து வந்தார்கள்.
இதனிடையே நேற்று (மார்ச் 5) செல்வராகவன் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தற்போது பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் ஒரு சிறு வீடியோ பதிவு ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ பதிவுடன் "திரை சரித்திரத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற எதிர்பார்ப்பு வேறு படத்திற்கு இருந்துள்ளதா?எனத் தெரியவில்லை! எனவே நம்பிக்கையுடன் இதைப் பகிர்கிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பார்த்திபன் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், முதலில் "பிறந்த நாள் வாழ்த்துகள் சார். பிறந்த நாளில் மட்டுமல்ல, பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்துகள். 'ஆயிரத்தில் ஒருவன் 2' எப்போது வரும் என்று கேட்கும் ஆயிரம் நபர்களில் நானும் ஒருவன்" என்று பார்த்திபன் குரல் இடம்பெற்றுள்ளது.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் செல்வராகவன், "மிக்க நன்றி சார். சீக்கிரமாக 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தில் இணைவோம். எனக்கு போன் செய்ததிற்கு நன்றி சார்" என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் 'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் விரைவில் உருவாகும் எனத் தெரிகிறது.