

பெங்களூரு: பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. ராஜாஜி நகர் ஓரியன் மாலில் மார்ச் 4-ம் தேதி வரை 7 நாட்களுக்கு திரைப்பட விழா நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள கண்டீரா அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தொடக்க விழாவில் முதல்வர் எடியூரப்பா, நடிகர் யஷ், நடிகை ஜெயப்பிரதா, தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திரைப்பட விழாவில் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் திரைப்படங்கள் மட்டுமின்றி 60 நாடுகளைச் சேர்ந்த 225 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. கன்னடம், இந்தியா, சர்வதேசம், ஆவணப்படம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியப் பிரிவில் இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு, இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்கள் மட்டுமே திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திரைப்பட விழாவை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் நடைபெறுகின்றன. இதில் இந்திய திரைக் கலைஞர்கள் மட்டுமின்றி ஈரான், பிரான்ஸ், இலங்கை, கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்று திரைக்கலை குறித்து உரையாற்றுகின்றனர்.